புஷ்பா 3 படத்தில் சல்மான் கான் கேமியோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவியுள்ளது. மைத்ரி நிறுவனம் புஷ்பா பிராண்டை மேலும் விரிவாக்க முயற்சியில் உள்ளது. இதே நேரத்தில், சல்மான் கான் நடிக்கும் மற்றொரு காமெடி படத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கி இரு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் `புஷ்பா'. இப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜுனை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது. மேலும் புஷ்பா 2 படம் ஜனவரி 16ம் தேதி ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியிடப்பட்டது.
புஷ்பா படத்திற்கு இருக்கும் வரவேற்பை பயன்படுத்தி, அந்த உலகை இன்னும் பெரியதாக்க முயன்று வருகிறது தயாரிப்பு நிறுவனம் மைத்ரி. புஷ்பா படத்தின் இரு பாகங்களிலும் வில்லனாக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். இது படத்தின் மீது பார்வையாளர்களுக்கு இருக்கும் ஆவலைக் அதிகப்படுத்தியது. இப்போது புஷ்பா 3 படத்தில் ஒரு பெரிய நட்சத்திரத்தை கேமியோ ரோலில் நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.
அந்த ரோலில் பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பாத்திரத்தை தனியாக வைத்தும் ஒரு படம் தயாரிக்க உள்ளதாம். அதே நேரம் மைத்ரி நிறுவனம் தயாரிக்க சல்மான் கான் நடிப்பில் ராஜ் & டிகே இயக்கும் ஒரு காமெடி படத்திற்கான பேச்சு வார்த்தையும் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களில் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வெறுமனே இணையத்தில் இந்த தகவல்கள் சுற்றி வருகிறது. மேலும் அல்லு அர்ஜூன் இப்போது அட்லீ, லோகேஷ் இயக்கும் படங்களை முடித்துக் கொடுக்க வேண்டும். இயக்குநர் சுகுமாரும் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் முடிந்த பின்னர் தான் என்ன நடக்கும் என்பதே தெரியும்.