செய்தியாளர் - M. மீரா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் பாராட்டுகளை குவித்துள்ளார். படத்தின் காட்சியமைப்பு, திரைமொழி மற்றும் தொழில்நுட்பத் திறனைப் புகழ்ந்த அவர், இந்தப் படத்தைப் பார்த்து எனக்கே பொறாமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
படக்குழு வெளியிட்ட வீடியோவில் பேசிய மணிரத்னம், கார்த்திக் மிகவும் சிறப்பான திறமை வாய்ந்த இயக்குநர். இன்றைய இளம் இயக்குநர்களில் அவர் முன்னணியில் இருக்கிறார். டோரதி ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் என்றார்.
மேலும், படத்தின் திரைமொழி அற்புதமாக இருக்கிறது. ஷாட்கள், காட்சிகளின் கட்டுப்பாடு, தொழில்நுட்பம் எல்லாமே மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு தனித்துவமான உயிர் கொடுத்துள்ளது. கார்த்திக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் அவர் கூறினார்.
1990-களை பின்னணியாகக் கொண்ட டோரதி (Dorothy), இரண்டு ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருவதால் உருவாகும் உறவுகளையும், LGBTQIA+ கருப்பொருளையும் மையமாகக் கொண்டுள்ளது. வழக்கமான காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த சில ரசிகர்களுக்கு படம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் அதன் வித்தியாசமான அணுகுமுறையை பாராட்டியுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவான டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF)-வில் உலகத் திரையிடலை கண்ட டோரதி, அங்கு பார்வையாளர்களின் நின்று கைதட்டும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.