பிரிட்டனில் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
மார்ச் 8ஆம் தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தை பகிர்ந்துகொண்டார். நுழைவாயிலில் வந்து வரவேற்ற இளையராஜாவுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து, இளையராஜா தனது கைப்பட எழுதிய Valiant சிம்பொனி இசைக்குறிப்புகளை முதல்வரிடம் காண்பித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு
இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு நன்றி தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள பதிவில், நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில்வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் தன்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன என்றும், மிக்க நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.