‘டோரதி’ பட இசை, குறிப்பாக ‘முத்துமணி’ பாடல், இணையத்தில் வைரலாகும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் உரையாடிய இளையராஜா, மதுரையில் ஹாஸ்டலில் தங்கி இசை அமைத்த நாட்கள், நண்பர்களின் சிகரெட் காமெடிகள், பூட் மேக்கர் மேடையில் பாரதிராஜா சட்டையை பிடுங்கிய சம்பவம், சென்னை செல்ல போராடிய அனுபவம் போன்றவற்றை சிரிப்புடன் நினைவுகூர, ரசிகர்கள் இந்த திறந்த மன உரையாடலை ஆர்வத்துடன் வரவேற்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவிருக்கும் படம் ’டோரதி’. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இளையராஜா இசையில் வெளிவந்த கல்யாண விருந்து, முத்துமணி பாடல்கள் மற்றும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இசை தொகுப்பு அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
அதேபோல படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், பட வெளியீட்டிற்கு முன்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் ஒரு கலகலப்பான உரையாடலில் இளைஞராஜா பங்கெடுத்துள்ளார். அதில் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்து கொண்ட இளையராஜா, குழந்தைத்தனமான சிரிப்புடன் கலகலப்பாக பேசினார்.
அப்போது டோரதி படம் இரண்டு பால்ய நண்பர்கள் குறித்த கதை, படத்தை பார்த்தபோது உங்களுக்கு உங்களுடைய பால்ய நண்பர்கள் பற்றிய நினைவு வந்ததா என கார்த்திக் சுப்புராஜ் கேட்டார். அதற்கு பதிலளித்த இளையராஜா, “எப்படி வராமல் இருக்கும், பல நண்பர்களின் நியாபகங்கள் வந்துசென்றது. தெருவில் இருக்கும் நண்பர்கள் என எப்போதும் கும்பலாக சுற்றுவோம், அதேபோல இசையமைக்க மதுரை செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் கல்லூரியில் சென்று ஹாஸ்டலில் தங்கிக்கொள்வேன். அங்கிருப்பவர்களுக்கு நானும் அங்கே தான் இருக்கிறேன் என்று நினைத்துக்கொள்வார்கள். அங்கிருக்கும் நண்பர்களுடன் நீ இன்ஜினியர் ஆகுறதுக்குள்ள நான் இசையமைப்பாளர் ஆகிடுவேன் டா என்றெல்லாம் பல காமெடிகளை பகிர்ந்துகொள்வோம். ஒருவன் என்ன சொன்னாலும் அதை சிகரெட்டுடன் தொடர்புபடுத்தி காமெடி செய்வான், பீடியை ஒரு பக்கம் தான் புடிக்க முடியும், சிகரெட்ட ரெண்டு பக்கமும் புடிக்கலாம், எப்படி இருந்தாலும் சிகரெட்ட கால்ல தான் டா போட்டு மிதிக்கணும்னு நிறைய சொல்லுவான்” என பால்ய நினைவுகள் குறித்து கலகலப்பாக பேசினார்.
பாரதிராஜா உடனான நிகழ்வொன்றை பகிர்ந்து கொண்ட அவர், “பூட் மேக்கர் பிஏ என்ற மேடை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது தான் அந்த சம்பவம் நடந்தது. பூட் மேக்கர் எல்லாம் இல்ல, பூட்-க்கு பாலீஸ் போடுறது தான் கேரக்டர். நிகழ்ச்சிக்காக நான் இசையமைத்துக்கொண்டிருக்கிறேன், அப்போது ஒரு காட்சி சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வந்த பாரதிராஜா டேய் சட்டையை கழட்டுடா என்றான். யோவ் என்னயா நீ இப்படி வந்து கேட்குற என கேட்டேன், வேற சட்டை இல்ல குடுடானு கழட்ட சொல்லி வாங்கிட்டு போய்ட்டார். எனக்கா நாளைக்கு அந்த சட்டை போட்டுகிட்டு தான ஊருக்கு போகனும், பாரதிராஜா சட்டையை இவன் போட்டுட்டு வந்துட்டான்னு சொல்லுவாங்களேனு நினைச்சு அவன் நடிக்க நடிக்க நான் சட்டையவே பார்த்துட்டு இருக்கன். உடனே வந்து அடுத்த காட்சிக்கு சட்டையை கழட்டி கொடுத்துட்டு போய்ட்டார். நான் உடனே இது என் சட்டை தான்னு காட்டுறதுக்காக, சம்மந்தமே இல்லாத ஒரு காட்சிக்குள்ள நடிக்க அந்த சட்டையை நான் போட்டுகிட்டு போய்ட்டன். அப்போ நீ ஏன் டா வந்தனு பாரதிராஜா கேட்பார். இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கு’ என சிரித்துக்கொண்டே பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை வருவதற்கு முன்பு, மதுரையிலேயே தங்கி இசையமைத்துவிட்டு கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு போலாம் என வாய்ப்பு தேடி சென்றோம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என அனைவரும் அவர்களுக்கு போட்டியாக வந்துவிடுவோம் என எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. ஒருநாள் முழுவதும் வாய்ப்புக்காக அலைந்து திரிந்துவிட்டு எதுவும் கிடைக்காததால் சென்னைக்கே சென்றுவிடலாம் என முடிவு செய்தோம். அந்த ஒருநாள் உலகம் எப்படியானது என்ற அனுபவத்தை கொடுத்தது” என பேசினார்.
இளையராஜா மிகவும் கலகலப்புடன் மனம்திறந்து பேசியிருக்கும் இந்த உரையாடலை அவருடைய ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.