santhosh narayanan
santhosh narayanan pt
சினிமா

“அறிவுக்கு இன்வைட் அனுப்பி இருக்கேன்.. Block பண்ணிருக்கார் போல; காத்திருக்கிறேன்” - சந்தோஷ் நாராயணன்

யுவபுருஷ்

பாடகர் தெருக்குரல் அறிவு எழுத்து மற்றும் இசையில் உருவான ‘என்ஜாய் எஞ்சாமி’ எனும் ஆல்பம் சாங், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆனது. இப்போதுவரை யூடியூபில் 485 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது இந்த பாடல். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், அவரது மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு உட்பட கூட்டு முயற்சியில் உருவான பாடலுக்கு வாழ்த்து சொல்லாத பிரபலங்களே இல்லை என்ற அளவுக்கு வரவேற்பை பெற்றது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது ஒளிபரப்பப்பட்ட எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனது மகள் தீ-ஐ மட்டும் பாடலில் முன்னிறுத்துகிறார் என்கிற விமர்சனமும் மேலோங்கியது. இதற்கிடையே, இந்த பிரச்சனை குறித்து வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட தெருக்குரல் அறிவு, “இந்த பாடல் முழுமை பெற்றதில் கூட்டு முயற்சியும் (Team Work) இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இப்பாடல், `எல்லாமும் எல்லோருக்குமானது’ என்று சொல்லும் கருத்திலும் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக இப்பாடல் வள்ளியம்மாளின் சரித்திரத்தையோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட என் முன்னோர்களின் சரித்திரத்தையோ குறிக்கவில்லை என்று பொருள் இல்லை.

என்ஜாய் எஞ்சாமி பாடலை போலவே, என்னுடைய ஒவ்வொரு பாடலும், ஒரு தலைமுறையினர் சந்தித்த ஒடுக்குமுறையை அடையாளப்படுத்தும் விதமாகவே இருக்கும். இந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை, முழுக்க முழுக்க நானே `எழுதி’ `இசையமைத்து’ `பாடி’ `திரை முன் நடித்து’ பெர்ஃபார்ம் செய்தேன். இப்பாடலுக்காக யாரும் எனக்கு ட்யூன் போட்டு கொடுக்கவில்லை; மெலடியோ அல்லது ஒரே ஒரு ஒற்றை வார்த்தையையோ கூட வேறு யாரும் எனக்கு கொடுக்கவில்லை. இப்பாடலுக்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் கண்விழித்து, தூங்காமல் மிகுந்த மன அழுத்தத்துக்கு மத்தியில் நான் உழைத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சமூகவலைதளங்களில் அறிவுக்கு ஆதரவாக கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்த பாடல் பிரச்சனையால், இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. காரணம், பா. ரஞ்சித் அறிவுக்கு நேரடியாகவே தனது ஆதரவைக் கொடுத்திருந்தார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அறிவையும் இடம்பெற வைத்திடுவார் பா. ரஞ்சித்.

இது இப்படியாக செல்ல, ”என்ஜாய் எஞ்சாமி பாடல் கூட்டு முயற்சியால் உருவானது. அறிவு ஒரு அற்புதமான கலைஞர்” என்று விளக்கமளித்தார் சந்தோஷ் நாராயணன். இதற்கிடையே, பா. ரஞ்சித்தின் நட்சத்திரங்கள் நகர்கிறது மற்றும் தங்கலான் படத்திற்கு வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர், இருவருக்கு இடையேயான விரிசல் சரியாகவில்லை என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் வரும் 10ம் தேதி நடக்க இருக்கும் சந்தோஷ் நாராயணனின் ’நீயே ஒளி’ இசைநிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பை எக்ஸ் தளத்தில் அறிவித்தார். இதனால், பிரச்சனை முடிந்து சமாதானமாகவிட்டனர் என்று பேசப்படுகிறது.

இதற்கிடையே, இசைநிகழ்ச்சி குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தோஷ் நாராயணன், தெருக்குரல் அறிவு நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது "அறிவுக்கு இன்வைட் அனுப்பி இருக்கிறேன். அவர் என் நம்பரை பிளாக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் பார்த்துவிட்டு வந்தால் மகிழ்ச்சி.

தீ - அறிவு பாடிய பல பாடல்கள் வெளியிடாமல் இருக்கிறது. ஆனால் என்ஜாயி எஞ்சாமி பாடல் பிரச்சனையானதால் அவை அப்படியே இருக்கிறது. காத்திருந்தால் எல்லாம் சரியாகும், கோபமாக இருப்பவர்கள், எதனால் இந்த பிரச்சனை நடந்தது என்று புரிந்தபின் சரியாகிவிடும். அதற்காக நான் காத்திருக்கிறேன்" என்று பதிலளித்தார்.