ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து, கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவரகொண்டா, ”தனது சொந்த நாட்டு மக்களை பாகிஸ்தானால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, ஆனால் அவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், பாகிஸ்தானை இந்தியா தாக்க வேண்டிய அவசியம் இல்லை. பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசைத் தாக்கிவிடுவார்கள். அவர்கள் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல், 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினர்போல நடந்துகொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து பழங்குடி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு, ஜூன் 17 அன்று ஹைதராபாத்தின் ராய்துர்கம் காவல் நிலையத்தில் தேவரகொண்டா மீது தெலங்கானா பழங்குடியினர் நலச் சங்கம் புகார் அளித்தது.
இதுகுறித்து ஹைதராபாத் காவல் துறை, "எந்தவொரு சாதி அல்லது பழங்குடியினருக்கும் எதிராக இழிவான கருத்துகளை வெளியிடுவது கடுமையான குற்றமாகும் என்பதால், இந்தப் புகாரை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே விஜய் தேவரகொண்டா பொது மன்னிப்பு கேட்டு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் பயன்படுத்திய பழங்குடி என்ற சொல் வரலாற்று மற்றும் அகராதி அர்த்தத்தில் குறிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித சமூகம் உலகளவில் பழங்குடியினர் மற்றும் குலங்களாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த, பெரும்பாலும் மோதலில் ஈடுபட்டிருந்த ஒரு காலத்தைக் குறிக்கிறது. அதேநேரத்தில் எனக்கு, எந்தவொரு சமூகத்தையும், குறிப்பாக நமது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை, காயப்படுத்தவோ அல்லது குறிவைக்கவோ எந்த நோக்கமும் இல்லை. அவர்களை நான் ஆழமாக மதிக்கிறேன்.
எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதுகிறேன். எனது செய்தியின் எந்தப் பகுதியும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டாலோ அல்லது புண்படுத்தப்பட்டாலோ, நான் எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமை பற்றிப் பேசுவதே எனது ஒரே நோக்கம். உயர்த்துவதற்கும் ஒன்றிணைப்பதற்கும் எனது தளத்தைப் பயன்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒருபோதும் பிரிக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.