சாய் அபயங்கர் web
சினிமா

”ஆடியன்ஸே யோசிக்கும் போது..” எப்படி 7 படம் சைன் பண்ணீங்க? சாய் அபயங்கர் ஓபன் டாக்!

ஒரு படம் கூட இன்னும் மியூசிக் போடல, அதுக்குள்ள எப்படி இசையமைப்பளாரா 7 படங்கள் கையெழுத்தாகிருக்கு என சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆன நிலையில், அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார் சாய் அபயங்கர்.

Rishan Vengai

சமீபத்தில் ’கட்சி சேர (எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால)’ , ’ஆச கூட (என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள)’ போன்ற ஆல்பம் பாடல்களால் எல்லோரையும் கட்டிப்போட்டவர் சாய் அபயங்கர். இவர் பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மெட்டு, இளைஞர்களை இழுக்கும் விதமான காதல் சொட்டும் வரிகள் என கவர்ந்திழுந்த அபயங்கரின் பாடல்கள், தமிழ் திரையுலகில் பெரிதும் கவனம் பெற்றன.

இந்த சூழலில் இரண்டு ஆல்பம் படங்களை மட்டுமே இசையமைத்திருக்கும் அபயங்கர், அடுத்தடுத்த 7 பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக சைன் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பல்வேறு விமர்சனங்களையும் பெற்றுத்தந்தன.

சாய் அபயங்கர் -

அது எப்படி திமிங்கலம்’ ஒரு ஆல்பம் பாடல் ஹிட் கொடுத்தால் இத்தனை படங்களுக்கான வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பிய நெட்டிசன்கள், இதற்கு முன்பு திரைப்படங்களுக்கு ஹிட் பாடல்கள், ஹிட் பிஜிஎம்கள் என கொடுத்து வாய்ப்புக்காக காத்திருக்கும் இசையமைப்பாளர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இவருக்கு மட்டும் எப்படி என்ற விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

இந்த சூழலில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று பேசியிருக்கும் சாய் அபயங்கர், ஆடியன்ஸே இவ்வளவு யோசிக்கும் போது புரொடியூசர்ஸ், டைரக்டர்ஸ் யோசிக்க மாட்டாங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யோசிக்க மாட்டாங்களா?

தமிழ் சினிமாவில் புது திறமையாளர்களுக்கு என எப்போதும் தனி இடம் இருந்துவருகிறது. அந்தவகையில் புதுமுகமாக உள்ளேவந்து பெரிய ஹீரோக்களின் படங்களை தன்வசம் வைத்திருக்கும் அனிருத் ஏற்கனவே முன்னுதாரணமாக இருந்தாலும், அவர் 3 என்ற படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும், படத்தின் பிஜிஎம் என அனைத்து மேஜிக்கையும் ஒரு புள்ளியில் நிறுத்தியபிறகே வாய்ப்புகள் தேடிவந்தன.

மாறாக ஒரு பாடலை ஹிட் கொடுத்த ஒருவருக்கு எப்படி இவ்வளவு வாய்ப்புகள் வருகிறது. அப்படியானால் இவ்வளவு தமிழ் திரையிசையில் மிளிர்ந்துவரும் ஷான் ரோல்டன், சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாரும் எங்கேபோவது என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

Sean Roldan - Sam C. S. - sai abhyankkar

இந்நிலையில் சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேர்காணல் ஒன்றில் பதிலளித்திருக்கும் சாய் அபயங்கர், “எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எந்தவிதமான செல்வாக்கும் இல்லை. என்னுடைய முதல் பட வாய்ப்பு கட்சி சேர பாடலை பார்த்துதான் கிடைத்தது. என்னுடைய பாடல் மூலமாக தான் எனக்கு பென்ஸ் படத்திற்கான வாய்ப்பு தேடிவந்தது. அது அப்படியே திரையுலகில் பேசுபொருளாக மாறி பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடிவந்தன. அதற்கு நான் இசையுலகின் நெட்வொர்க்கில் இருந்துவருவதும் ஒரு காரணம்.

இந்த படங்கள் எல்லாம் அப்படி கிடைத்த வாய்ப்புதானே தவிர, எந்த செல்வாக்காலும் வரவில்லை. ஆடியன்ஸே இவ்வளவு யோசிக்கும் போது படத்தை இயக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் யோசிக்க மாட்டார்களா. நான் பணிபுரிவதெல்லாம் ஜாம்பவான்கள் இடம்தான், என்னுடைய மலையாள படத்தை மோகன்லால் தான் அறிவித்தார். அவர் எனக்கு ஃபோன் செய்து என்னிடம் பேசினார்” என்று பேசியுள்ளார்.

சாய் அபயங்கர் கமிட்டாகியுள்ள படங்கள்:

பென்ஸ் - ராகவா லாரன்ஸ் - லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படம் LCU-ல் ஒரு பகுதியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது

கருப்பு - சூர்யா, திரிஷா - ஆர்ஜே பாலாஜி (இயக்குநர்)

மார்ஷல் - கார்த்தி - 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ்

டியூட் - பிரதீப் ரங்கநாதன் - இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன்

பல்டி - ஷேன் நிகாம் - அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம்

STR49 - சிம்பு - ராம்குமார் பாலகிருஷ்ணன்

AA22xA6 - அல்லு அர்ஜுன் 22வது படம் - அட்லீ 6வது படம் - இந்தியாவின் பிரமாண்ட திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதுபோக சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்திலும் சாய் அபயங்கர் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.