டெனிஸ் வில்லெனுவின் 'டூன்' பட வரிசையின் மூன்றாவது பாகமான 'Dune 3' டீசர் வெளியானது. பால் அத்திரையின் பேரரசராக மாறும் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் டிமோதி சாலமேட், ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் மீண்டும் இணைந்துள்ளனர். ராபர்ட் பாட்டின்சன் வில்லனாக நடிக்கிறார். படம் டிசம்பர் 18 அன்று வெளியாகிறது.
டெனிஸ் வில்லெனுவ் இயக்கிய படம் `டூன்'. Frank Herbert எழுதிய Dune புத்தகத்தை தழுவி உருவான இப்படத்தின் முதல் பாகம் 2021லும், இரண்டாம் பாகம் 2024லும் வெளியானது. இப்போது Frank Herbert எழுதிய Dune Messiah புத்தகத்தை தழுவி `Dune 3' படத்தை இயக்கியுள்ளார்.
Dune பட வரிசையில் மூன்றாவது மற்றும் இறுதி பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானது. முந்தைய படங்களில் இருந்த டிமோதி சாலமேட், ஜெண்டயா, ஃப்ளோரன்ஸ் பக், ரெபேக்கா பெர்குசன், ஜேசன் மோமோவா ஆகியோர் இந்த பாகத்திலும் வருகின்றனர். இந்த பாகத்தில் வில்லனாக ராபர்ட் பாட்டின்சன் வருகிறார். வரவிருக்கும் திரைப்படத்தின் கதை, பிரபஞ்சத்தின் பேரரசராக மாறியுள்ள பாலை வீழ்த்துவதற்காக நடக்கும் சதிகளும், அதற்கு எதிராக பால் துவங்கும் ஒரு போரையும் மைப்படுத்தியதாக அமைந்திருக்கிறது.
இந்த பாகத்தின் திரைக்கதையை டெனிஸ் வில்லெனுவ் மற்றும் பிரையன் கே. வாகன் ஆகியோர் எழுதியுள்ளனர். லினஸ் சாண்ட்கிரென் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற ஹான்ஸ் சிம்மர் தான், இந்த பாகத்திற்கும் இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.