அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படம் என அடுத்தடுத்த அஜித் திரைப்படங்கள் வெளியானது அஜித் ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியது. கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் கூட திரையரங்குகளில் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். குறிப்பாக அஜித் நடித்த பழைய படங்களில் மறு ஆக்கங்கள் நிறைய படத்தில் இடம்பெற்றிருப்பதால் அவர்களை அது அதிகம் கவர்ந்திருக்கிறது.
இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்தே நாட்களில் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படம் வெளியான முதல் நாளில் இந்தப் படம் ரூ.30.9 கோடி வசூல் செய்திருந்தது. அஜித் சினிமா கேரியரில் இதுவே அதிகபட்ச முதல் நாள் வசூல் ஆகும்.
உலக அளவில் குட் பேட் அக்லி சுமார் 175 கோடியை தொட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு வெளியான அஜித்தின் விடா முயற்சி படத்தின் மொத்த வசூலே ரூ.136 கோடி தான். இந்நிலையில், தற்போது 5 நாட்களிலேயே 150 கோடியை தாண்டி படம் வெற்றி நடைபோடுகிறது.
விடுமுறை தினங்கள் என்பதால் நேற்று வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் வந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்குமேல் எப்படி மக்கள் கூட்டம் வருகிறது என்பதை பொறுத்துதான் 300 கோடி கிளப்பில் இடம்பெறுமா என்பது தெரியும். மாணவர்களுக்கு பரீட்சை முடியும் நேரம் என்பதால் நிச்சயம் இன்னும் வசூலில் தாக்கம் இருக்கும் என்றே தெரிகிறது.