GOOD BAD UGLY | படத்துல REFERENCE இல்ல... REFERENCE தான் படமே..!
GOOD BAD UGLY REVIEW(2 / 5)
முன்னாள் கேங்ஸ்டர் ரெட் டிராகன் (எ) AK (அஜித்குமார்) தன் மனைவி ரம்யா (த்ரிஷா) கேட்டுக் கொண்டதாலும், மகனுக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தாதலும், தன் தவறுகளை ஒப்புக் கொண்டு அரசாங்கத்தில் சரணடைந்து மும்பையில் 18 வருடங்கள் சிறை வாசம் இருக்கிறார் . அப்பாவின் குற்ற பிம்பத்தை மறைத்து அவர் பிஸ்னசில் பிசியாக இருக்கிறார் என சொல்லி ஸ்பெய்னில் தன் மகன் விஹானை (கார்த்திகேயா தேவ்) வளர்க்கிறார். பல வருடங்களுக்கு பின் விஹானை பார்க்க சிறையில் இருந்து விடுதலையாகி ஸ்பெய்னுக்கு AK வரும் போது, போதைப் பொருள் வழக்கு ஒன்றில் விஹான் கைதாகிறார். மகனுக்காக கைவிட்ட வன்முறையை, அவனை காப்பாறுவதற்காக மீண்டும் கையில் எடுக்கிறார் AK. மகனை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தது யார்? அவரை காப்பாற்றினாரா AK? இவைதான் படத்தின் மீதிக்கதை.
கடந்த சில வருடங்களாக மிக சிரியஸான படங்களில் அஜித்தைப் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு கண்டிப்பாக GBU ஒரு புத்துணர்ச்சியை தரும். இளமையான தோற்றம் - ஸ்டைலான கேங்ஸ்டர் வரை பல பல கெட்டப்களில் வருகிறார். கார்டு மேல 16 நம்பர் சொல்லுசார், இருங்க பாய் என ட்ரென்டிங் வசனங்கள் துவங்கி அஜித்தின் பழைய படங்களின் வசனங்கள் வரை அஜித் பேசும் ஒவ்வொன்றுக்கும் தட்ரா க்ளாப்ச என ரசிகர்கள் அலற விடுகிறார்கள். ஒரு ரசிகராக அஜித்திடம் பார்த்து ரசித்த அத்தனையும் இந்தப் படத்தில் கொண்டு வந்து சம்பவம் செய்திருக்கிறார் ஃபேன்பாய் ஆதிக் ரவிச்சந்திரன்.
நடிகராக அஜித், ஒன் மேன் ஷோவாக படத்தை தாங்க முயற்சித்திருக்கிறார். டான்ஸ், ஃபைட், மாஸ் என எந்தக் குறையும் வைக்கவில்லை. த்ரிஷாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், வரும் காட்சிகளுக்கு தேவையான சீரியஸ் உணர்வை கொடுக்கிறார். வில்லன் ரோலில் வரும் அர்ஜுன் தாஸ் வித்தியாசமான கெட்டப்பில் வந்திருக்கிறார், ஓரளவு கவனிக்க வைக்கிறார். இவர்கள் தவிர பிரபு, பிரசன்னா, சுனில், உஷா உதுப், ப்ரியா பிரகாஷ் வாரியார் எனப் பலர் வருகிறார்கள், எல்லோரும் கெஸ்ட் ரோல் அளவிலேயே வருகிறார்களே தவிர யாருக்கும் அழுத்தமான பாத்திரம் இல்லை. கெஸ்ட் ரோலில் வரும் சிம்ரனுக்கு கூட ஒரு நல்ல ரோல் இருக்கிறது. ஆனால் முழுமையாக வரும் கதாப்பாத்திரங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
படத்தின் பிரச்சனை படம் எழுதப்பட்டிருக்கும் விதமே. படத்தின் கதை மிக வழக்கமானது தான். சரி அதைக் கொடுத்த விதத்தில் புதிதாக ஏதாவது இருக்கும் என்றால், படத்தில் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை அஜித்தின் பழைய பட ரெஃபரன்ஸ் வந்து கொண்டே இருக்கிறது. துவக்கத்தில் ஜாலியாக இருக்கும் அவை, போகப் போக சோதிக்கிறது. இன்ஸ்டா ரீல்ஸ் பாணியிலேயே படம் நகர்வது , ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் இது அஜித்தின் பழைய படங்களை, அஜித்தை வைத்தே ஒரு ஷோ ரீலாக எடுத்தது போல் தான் இருக்கிறது. அந்த இண்டர்வெல்லில் வரும் விஜய் ரெஃபரன்ஸ் ஒரு நல்ல முயற்சி. மற்றபடி ஒரு பக்கம் ரெஃபரன்ஸ் சோதிக்கிறது என்றால், இன்னொரு பக்கம் வின்டேஜ் பாடல்களை கொண்டு மேலும் எரிச்சலைக் கூட்டுகிறார்கள். ஒத்த ரூபாய் பாடல் துவங்கி - பணத்துக்காக என்ன விட்டு அவன் கூட போனியே வரை பாட்டு செலக்ஷன் சிறப்பு என்றாலும், படத்தில் அது பொருந்தவில்லை.
AK எவ்வளவு பெரிய டான் என்பதை சொல்ல பின் கதை ஒன்று சொல்லப்படுகிறது. படத்தின் ரைட்டிங் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு அதுவே உதாரணம். அதிலும் டான் லீ, ஜான் விக், ப்ரெஃபாசர் என கலர் கலராக ரீல் விடுவதெல்லாம் என்ன விதமான ஸ்கேம் எனத் தெரியவில்லை. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. Darkkeyயின் புலி புலி பாடல் சேசிங் காட்சிக்கு எனர்ஜி ஏற்றுகிறது. அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் படம் கலர் ஃபுல்லாகவும், தரமாகவும் இருக்கிறது.
படத்தில் சொல்லப்படுவதெல்லாம் ஒன்று அஜித்தின் பழைய ரெஃபரன்ஸ் ஆக இருக்கிறது, இல்லை நம்பவே முடியாத அளவு லாஜிக் இல்லாமல் இருக்கிறது. அட்லீஸ்ட் அதை ஒரு தெளிவான, பரபரப்பான திரைக்கதைக்குள் வைத்திருக்கலாம். படம் என்னதான் 2மணிநேரம் 20 நிமிடங்களே ஓடினாலும், சுவாரஸ்யமின்றி இருப்பதால், படத்தை முடிங்க பாஸ் என்ற எண்ணம் மேலிடுகிறது. படத்தின் இறுதியில் வரும் ப்ளூபர்ஸ் காட்சிகள்... படம் பார்த்த களைப்பை கொஞ்சம் நீக்குகிறது.
அஜித்தின் பழைய பட ரெஃபரன்ஸ் காட்சிகளை திரைக்கதைக்குள் வைத்து, ஆதிக் கொடுத்திருக்கும் மாஷ் அப் வீடியோ போல் இருக்கிறது இந்த குட் பேட் அக்லி.