2017ல் ஷங்கர் - கமல் கூட்டணி `இந்தியன் 2' படத்திற்காக மீண்டும் இணைகிறது என்ற அறிவிப்பு வெளியானது. தில் ராஜு இதனை தயாரிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது என மாறி, 2019ல் படப்பிடிப்பு துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் மோசமான விபத்து நிகழவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல காரணங்களால் மீண்டும் படப்பிடிப்பு துவங்காமலே இருந்தது. இதே சமயத்தில் `அந்நியன்' படத்தை இந்தியில் ரன்வீர் நடிப்பில் இயக்கப் போவதாக அறிவித்தார் ஷங்கர். ஆனால் அதில் பல சிக்கல்கள் இருந்ததால், அந்த முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டது.
ஒரு பக்கம் `இந்தியன் 2' பல சிக்கல்களால் மீண்டும் துவங்காமல் இருந்ததால், ராம் சரண் நடிப்பில் `கேம் சேஞ்சர்' படத்தை எடுக்க சென்றார் ஷங்கர். `இந்தியன் 2' படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்க இணைந்தார். ஒரு கட்டத்தில் `இந்தியன் 2' படத்தில் ஜெட் ஜெயண்ட் நிறுவனம் இன்னொரு தயாரிப்பளராக இணைந்ததும் மீண்டும் இதன் வேலைகள் சூடு பிடித்தது. ஒரே நேரத்தில் `இந்தியன் 2' மற்றும் `கேம் சேஞ்சர்' என இரு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்க துவங்கினார் ஷங்கர். மேலும் `இந்தியன் 2', `இந்தியன் 3' என இரு பாகங்களாக படத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு பரபரப்பாக தயாரானது படம்.
முதலில் `இந்தியன் 2', பின்பு `கேம் சேஞ்சர்', அடுத்து `இந்தியன் 3' என கணக்கு போட்டு வேலை பார்த்தார். ஒரு வழியாக 2024 ஜூலை 12ம் தேதி படம் வெளியானது, ஆனால் எதிர்பாராத விதமாக மிக மோசமான வரவேற்பே கிடைத்தது. விமர்சன ரீதியாக படம் வரவேற்பு பெறவில்லை என்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் படம் பெரிய லாபகரமானதாகவும் இல்லை என சொல்லப்பட்டது. இப்போது கேம் சேஞ்சருக்கு வந்திருக்கும் சிக்கலுக்கான ஆரம்ப புள்ளியும் இதுதான்.
தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்துக்கு மறைமுக ரெட் போடப்பட்டுள்ளதாக தகவல். அதாவது இந்தியன்-3 படத்தை ஷங்கர் முடித்துக் கொடுக்காமல், கேம் சேஞ்சர் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது எனவும் இந்தியன்-3 படத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் மேலும் 65 கோடி ரூபாய் பட்ஜெட் கேட்பதாவும் லைகா நிறுவனம், திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என லைகா தரப்பில் கூட்டமைப்பில் லைகா முறையீடு செய்துள்ளதாக தகவல்.
அதேபோல் இந்தியன்-3 திரைப்படத்தில் படமாக்கப்பட வேண்டிய, மீதமுள்ள பாடல் மற்றும் காட்சிகளை எடுக்காமல் படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என ஷங்கர் தரப்பில் திரைத்துறை கூட்டமைப்பினரிடம் விளக்கம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து நான்கு நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வரவில்லை என தகவல். இதனால் 10ஆம் தேதி வெளியாகவுள்ள கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்கு ஒப்பந்தம் தமிழகத்தில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
லைகா, ஷங்கர் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் தரப்பினர் இடையே நேற்று முந்தினம் வரை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்.
`கேம் சேஞ்சர்' படத்தின் தமிழக விநியோக உரிமை பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியாக 4 நாட்களே உள்ள நிலையில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு என்ன தீர்வு என்பது பேச்சுவார்த்தையில் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.