சமூக ஊடகங்களில் நட்சத்திர நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வதைத் தாண்டி, ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரைத் தாக்கி ஆபாசமாகத் திட்டிக்கொள்வது இணைய களத்தை நச்சுத்தன்மை வாய்ந்ததாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அஜித் படங்கள் வெளியாவது தாமதமாவதை விஜய் ரசிகர்கள் கிண்டலடிக்க, அதற்கு எதிர்வினையாக அஜித் ரசிகர்கள் தொடங்கியதுதான் ‘கடவுளே அஜித்தே’ என்னும் முழக்கம்!
ரசிகர்கள் தமக்குப் பிடித்த நடிகரைக் கொண்டாடுவதும் மிகையான பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துவதும் சகஜம்தான். ஆனால் ஒரு நடிகரைக் ’கடவுளே’ என்று வழிபடும் நிலைக்குப் போவதும் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாமல் அரசு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் அஜித் ரசிகர்கள் இந்த முழுக்கத்தை எழுப்புவதும் ஒரு பப்ளிக் நியூசென்ஸாக உருவெடுத்துவந்தது.
ஒரு நடிகராக அஜித்தை ரசிக்கும் சினிமா விரும்பிகளும் ஒரு மனிதராக அவர் மீது நன்மதிப்பு கொண்டவர்களும்கூட ’கடவுளே அஜித்தே’ என்னும் முழக்கத்தால் எரிச்சல் அடையவே செய்தார்கள்.
பொது வெளியிலிருந்து விலகியே இருக்கும் அஜித், எப்போதும் ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்றிருப்பவர். தன் மீதான அவதூறுகளுக்குக்கூட எதிர்வினை ஆற்றாத அஜித், ரசிகர்களின் சேட்டைகள் பிறரைத் துன்புறுத்தல் அளவுக்கு எல்லை மீறிப் போகும்போது அது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்களின் சேட்டைகள் பிறரைத் துன்புறுத்தல் அளவுக்கு எல்லை மீறிப் போகும்போது அது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்டகாலம் படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ திரைப்படத்துக்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த அலப்பறையை ஒரு அறிக்கைவிட்டுத்தான் தடுத்து நிறுத்தினார் அஜித்.
அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு, “தன்னை யாரும் இனிமேல் தல என்று அழைக்க வேண்டாம்” என்றும் “ஏகே என்றோ அஜித் குமார் என்றோ அழைத்தால் போதுமானது” என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டார். அஜித் ரசிகர்கள் அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ‘தல’ என்னும் பட்டம், பிற்காலத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதை அஜித் ரசிகர்கள் ரசிக்கவில்லை!
திரைப்பிரபலங்கள் சிலர் தோனியை ‘தல’ என்று குறிப்பிட்டபோது வெகுண்டெழுந்த அஜித் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட பிரபலங்களை வசைச் சொற்களால் வறுத்தெடுத்தனர். தனக்கென்று சமூக வலைதள கணக்குகளை வைத்துக்கொண்டிருக்காத அஜித் தனது ரசிகர்களால் பிற பிரபலங்களுக்குத் துன்பம் ஏற்படுவதைக் கேள்விப்பட்ட பிறகுதான் ’தல’ என்னும் பட்டத்தைத் துறக்க முடிவெடுத்ததாக்கக் கூறப்பட்டது. அஜித் இவ்வாறு அறிவித்த பிறகு, ரசிகர்களும் அவரை ஏகே என்றே அழைத்துவருகின்றனர்.
2025 பொங்கலை ஒட்டி வெளியாகவிருக்கும் தனது ’விடா முயற்சி’ படத்துக்கு அண்மையில் டப்பிங் பேசி முடித்திருக்கிறார் அஜித். ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பிலும் பங்கேற்றுவருகிறார். இவற்றுக்கு இடையில் தனக்கு மிகவும் பிடித்தமான கார் பந்தயங்களில் மீண்டும் கால் பதித்திருக்கிறார். போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இந்தப் பணிகளுக்கிடையே அவருக்குத் தேவையற்ற தலைவலியாக வந்துள்ளது ‘கடவுளே அஜித்தே’ முழக்கம்!
இதற்கு எதிராக நேற்று (10.12.2024) வெளியிட்ட அறிக்கையில் கூட, ”’க… அஜித்தே’ என்கிற முழக்கம்” தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தன்னைப் புகழ ரசிகர்கள் பயன்படுத்தும்’கடவுள்’ என்னும் சொல்லை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பதன் மூலம் மேம்பட்ட கண்ணியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அஜித். இந்த அறிக்கை வெளியான பிறகு ஏகே ரசிகர்களும் இந்த முழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவதாகக் கூறியுள்ளனர்.
ஆனால் அஜித்தின் இந்த அறிக்கை ‘கடவுளே அஜித்தே’ என்கிற முழக்கத்துக்கு மட்டும் பொருந்துவதல்ல. ’வாழு வாழவிடு’ என்பதை, தான் பின்பற்றுவதோடு தனது ரசிகர்களுக்கும் எப்போதும் வலியுறுத்திவருபவர் அவர். ஆனால் அஜித்தின் இந்த மனப்பான்மைக்காகப் பெருமைகொள்ளும் ரசிகர்கள் அதைத் தாமும் பின்பற்றுவதன் மூலமாகவே ஏகே மீதான உண்மையான மரியாதையை வெளிப்படுத்த முடியும்.
2011இல் தனது 50ஆவது படமான ’மங்காத்தா’ வெளியாகவிருந்த சூழலில் தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைப்பதாக அறிவித்தார் அஜித். அதற்கு முன் தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியிருக்கிறார்களே தவிர, எந்த நடிகரும் தனது ரசிகர் மன்றங்களை முற்றாகக் கலைத்ததில்லை.
அஜித்தின் துணிச்சலான இந்த அறிவிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ரசிகர் மன்றங்களைக் கலைத்த பிறகும் அஜித் ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
அதே நேரம் சமூக வலைதளங்கள், பெருந்திரளான அஜித் ரசிகர்கள் ஒன்றாகக் கூடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தன. அஜித் மீதான அன்பின் மிகுதியால் சில ரசிகர்கள், எதிர்தரப்பு மீது தமது தனிப்பட்ட வக்கிரங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர். போட்டி நடிகரின் பிறந்தநாள் அன்று அவருக்கு நினைவுநாள் அனுசரிப்பது, அந்த நடிகரின் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆபாசத் தாக்குதல்களைத் தொடுப்பது ஆகிய அநாகரிகங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விஷயத்தில் விஜய், ரஜினி உள்ளிட்ட பிற நடிகர்களின் ரசிகர்களும் சளைத்தவர்கள் அல்ல. எக்ஸ் தளத்தில் பல நேரம் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிறது. கல்வி உள்ளிட்ட சமூக வளர்ச்சிக் காரணிகளில் தேசிய அளவில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு குறித்த தவறான சித்திரத்தை பிற மாநிலத்தவருக்கு அளிக்கிறது.
விஜய்யின் ‘கோட்’ படத்தில் அவரது மகளாக நடித்த சிறுமி அப்படக் காட்சியிலேயே, தனக்கு மிகவும் பிடித்தவர் தல என்று சொல்வதுபோன்ற வசனம் இடம்பெற்றது. அது அஜித்தைக் குறிப்பதுதான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தச் சிறுமி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் தல என்பது தோனியைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்று தவறுதலாக கூறிவிட்டார். இதற்காக அந்தப் பெண்ணின் மீது வசைத் தாக்குதல்களை ஏவினர் அஜித் ரசிகர்கள். இதுபோல் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அஜித் தலையிட்டு அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்க முடியாது. ஆனால் இது போன்ற ரசிக அலப்பறைகள் பொதுப் பார்வையாளர்கள், மத்தியில் அஜித்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து இருப்பதையாவது இவ்வாறு செய்யும் ரசிகர்கள் உணர வேண்டும்.
2011இல் ரசிகர் மன்றத்தைக் கலைத்த அஜித், தன்னுடைய ரசிகர்கள் தன் படங்களைக் கேளிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மற்ற நேரத்தில் தமது எதிர்காலம், குடும்ப நலனின் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குப் பிறகும் பல சந்தர்ப்பங்களில் இதை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் மீண்டும் மீண்டும் இப்படி அறிக்கை வெளியிட்டு அமைதிப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை அஜித்துக்கு ஏற்படுத்துவது சரியா என்று ஏகே ரசிகர்கள் யோசிப்பார்களா?