Singeetam Srinivasa Rao apoorva sagodharargal / Singeetam Srinivasa Rao / Little John
சினிமா

’அபூர்வ சகோதரர்கள் to லிட்டில் ஜான்..’ புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

அபூர்வ சகோதரர்கள், ராஜ பார்வை போன்ற படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாக காலமானார்..

Rishan Vengai

சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழில் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், லிட்டில் ஜான், பேசும் படம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர், 94வது வயதில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் பல்வேறு படைப்புகளை வழங்கிய இவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

பழம்பெரும் புகழ்பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாக அவருடைய 94 வயதில் மருத்துவமனையில் காலமானார்.

தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இசை அமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழில் பல மறக்கமுடியாத படங்களை இயக்கியுள்ளார்.

Singeetam Srinivasa Rao

கமல்ஹாசனுடன் இணைந்து இவர் உருவாக்கிய ‘ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம்’ என அனைத்துமே பல சாதனைகளை குவித்த திரைப்படங்களாகும். இதில் ’பேசும் படம்’ எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமாகும், இது அப்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பிலிம்பேர், தமிழ்நாடு அரசு விருதுகளை வென்றதோடு 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

அபூர்வ சகோதரர்கள்

இந்தப்படங்களை தொடர்ந்து இவர்களின் காம்போவில் வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படமும் காலத்தால் அழிக்கமுடியாத படைப்பாகும். அதேபோல இவருடைய இயக்கத்தில் வெளிவந்த லிட்டில் ஜான் திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவத்திலிருந்து நீக்கவே முடியாத படமாகும்.

Little John

இதுமட்டுமில்லாமல் காதலா காதலா, மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற தமிழ்த்திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1984ஆம் ஆண்டு தெலுங்கில் நடன வாழ்க்கைத் திரைப்படமாக இவர் இயக்கிய பயோபிக் படமான ’மயூரி’ தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களிலும், கதைகளிலும் பல புதுமைகளை புகுத்திய பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.