சூரி - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் மாமன்.
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்கள் நேற்றைய தினம் ஒரே நாளில் வெளியாகின. இந்தவகையில், சூரியில் மாமன் படம் வெற்றி பெற வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவிலில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் பேசும்போது, மண்ணின் மைந்தன் சூரியின் படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என தெரிவித்து, “படத்தை எப்போ பாக்க போறோம்னு ரொம்ப ஆவலா இருக்கு” என்றும் கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகர் சூரி, நல்ல கதையாக இருந்து, நன்றாக படத்தை எடுத்திருந்தாலே அந்த படம் தானாக ஓடும் என்றும், மண்சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், ” மதுரையில் மாமன் படம் வெற்றி பெறவேண்டி, சில தம்பிகள் மண் சோறு சாப்பிட்டுள்ளனர். ரொம்ப ரொம்ப முட்டாள்தனமான செயல் இது! கதை நன்றாக இருந்தால் படம் ஓடப்போகிறது. மண்சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா என்ன? இப்படியொரு முட்டாள்தனமான செயலை செய்தவர்கள், என்னுடைய தம்பி அல்ல... ரசிகராக இருக்கக்கூட தகுதியானவர் இல்லை. நான் சாப்பாட்டை மதிப்பவன். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்துதான் இந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன்.
இந்த காசுக்கு யாருக்காவது தண்ணீரோ மோரோ வாங்கிக் கொடுத்திருந்தால்கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். 4 பேருக்கு சாப்பாடாவது வாங்கி கொடுத்திருக்கலாம்." என்று தெரிவித்துள்ளார்.