மறு தணிக்கை செய்யப்பட்ட எம்புரான் திரைப்படம் திரையரங்குகளில் நேற்றிரவு முதல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வெளியாகியிருந்த படத்தில் 24 காட்சிகளை கத்தரித்துவிட்டு படம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 நிமிடம் 8 நொடிகளுக்கான காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் பெயர் படத்தின் கடைசியில் இடம்பெறும் காட்சி நீக்கப்பட்டுள்ளதுடன் மத்திய விசாரணை அமைப்புகளின் பெயர்கள் குறிப்பிடப்படும் இடங்கள் மவுனம் ஆக்கப்பட்டுள்ளன.
மேலும், படத்தில் வில்லனின் பெயர் பாபா பஜ்ரங்கி என்று இருந்த நிலையில், அது பல்தேவ் என மாற்றப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இது குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், படத்தை மறு தணிக்கை செய்ய எந்த அழுத்தமும் தரப்படவில்லை எனக் குறிப்பிட்டார். முன்னதாக 2002இல் நடைபெற்ற குஜராத் கலவரத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது.
வலதுசாரியினர் படத்தை கடுமையாக எதிர்த்த நிலையில் மறுபுறம் படத்திற்கு பெரும் ஆதரவும் கிடைத்துவந்தது. படத்தை தடை செய்ய தொடரப்பட்ட வழக்கையும் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.