“எம்புரான்” படத்திற்கு தடை விதிக்க முடியாது.. கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு!
இயக்குனரும், நடிகருமான பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தின் வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் எல்-2 (எம்புரான்) கடந்த 27ம் தேதி வெளியானது.
திரைப்படம் வெளியானதிலிருந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் திரைப்படத்திற்கு எதிரான முழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் எம்புரான் திரைப்படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில் சொல்லப்பட்டது என்ன?
இது தொடர்பாக கேரள மாநில பாஜகவை சேர்ந்த வி.வி விஜூஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எம்புரான் படத்தில் 2002 கோத்ரா கலவரத்தைக் குறிப்பிடும் காட்சிகள் உள்ளன என்றும், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துக்களைக் கூறுகின்றன என்றும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சித்தரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் வகுப்புவாத கலவரத்தை உண்டாக்கும் என்பதால், சர்ச்சையைத் தடுக்கவும், வகுப்புவாத அமைதியின்மையைத் தவிர்க்கவும் படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மனதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
இம்மனு மீதான விசாரணையை விரைந்து பட்டியலிடக் கோரி மனுதாரர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ் டயஸ் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, திரைப்படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா? என மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, உங்களின் ஆட்சேபனை என்ன எனவும் மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ள சான்றிதழ் தவறா? எனவும் கேள்வி எழுப்பியதோடு, திரைப்படம் காரணமாக வன்முறையை தூண்டும் வகையில் அளிக்கப்பட்டுள்ள ஒரு புகாரையாவது மனுதாரர் நீதிமன்றத்திற்கு காண்பிக்க வேண்டும் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதோடு, இம்மனுவானது விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது போல் தெரிவதாக கூறினர்.
மேலும் மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே திரைப்படத் தணிக்கை வாரியம் திரைப்படத்தை வெளியிட உரிய சான்றிதழ் அளித்துள்ளது என நீதிபதி முன்பு தெரிவித்தனர்.
இதனை ஏற்ற நீதிபதி இடைக்கால தடை விதிப்பது உள்ளிட்ட எந்த ஒரு இடைக்கால நிவாரணத்தையும் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் மறுப்பு தெரிவித்து கோடை விடுமுறைக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலடப்படும் எனக் கூறினர்.