சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்த வழக்கு தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வழியாக லேண்ட் குரூசர், டிஃபென்டர் மற்றும் மசெராட்டி போன்ற சொகுசு கார்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து பதிவு செய்வதில் ஒரு கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. கோயம்புத்தூரை தளமாகக் கொண்ட இந்த நெட்வொர்க், இந்திய ராணுவம், அமெரிக்க தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் வழங்கியதாகக் கூறப்படும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அந்த கார்களை குறைந்த விலைக்கு பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சொகுசு கார் கடத்தல் மற்றும் சட்டவிரோத அந்நியச் செலாவணி தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 17 இடங்களில் இன்று சோதனை நடத்தியது.
இந்தச் சோதனைகளில் திரைப்பட நட்சத்திரங்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் வீடுகளும் அடங்கும். துல்கர் மற்றும் பிருத்விராஜ் வீடுகளிலும், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள சில வாகன உரிமையாளர்கள், ஆட்டோ பட்டறைகள் மற்றும் வர்த்தகர்களுடன் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, சுங்கத்துறை சோதனையின்போது, துல்கர் சல்மானுக்குச் சொந்தமான ஒரு லேண்ட் ரோவர் உட்பட பல செல்வாக்கு மிக்க நபர்களுக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக துல்கர் சல்மான் உயர் நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.