வரி ஏய்ப்பு செய்த துல்கர் சல்மான், பிரித்விராஜ்.. திடீர் சோதனையின் பின்னணி என்ன..?
திடீரென நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்திய நிலையில், அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் கேரளா மற்றும் தென்னிந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு நடவடிக்கையாக அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை கேரளாவில் உள்ள பிரபல நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், நடிகர் பிருத்விராஜ் ஆகியோரின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கேரள மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களான துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் இருவரும் சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்து கார்கள் வாங்கியது இந்த சோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது. அதாவது, பூட்டான் ராணுவத்தில் பயன்படுத்திய கார்களை சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்து வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் இருவரின் கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன் பூட்டான் ராணுவம் 50க்கும் மேற்பட்ட ராணுவ கார்களை ஏலம் விட்டுள்ளது. இதில், நேபாளம் வழியாக 37 கார்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்துள்ளதாம். முக்கியமாக, கேரளத்திற்குள் மட்டும் 20 கார்கள் கொண்டு வந்ததாகவும் அவற்றை நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரும் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகாரின் பேரிலேயே சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இருவரும் தலா ஒரு காரை சட்டவிரோதமாக வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.