சிவ ராஜ்குமார் pt web
சினிமா

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு சிகிச்சை வெற்றி... மருத்துவர்கள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதித்த சிறுநீரகப் பை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகிச்சையை நிறைவு செய்த அவர், விரைவில் தாயகம் திரும்பவுள்ளார்.

PT WEB

கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதித்த சிறுநீரகப் பை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகிச்சையை நிறைவு செய்த அவர், விரைவில் தாயகம் திரும்பவுள்ளார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவராஜ் குமார்

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் கண் அசைவால் மிரட்டி ரசிகர்களை மிரள வைத்தவர் கன்னட நடிகர் சிவராஜ் குமார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனான இவர், கன்னட திரையுலகில் உச்ச நடிகராக இருந்தபோதும், தமிழ்நாட்டிற்கு பெரியளவில் பரீட்சயமில்லாமல் இருந்தார். ஜெயிலர் திரைப்படம் தமிழில் சிறப்பான தொடக்கமாக அவருக்கு அமைந்ததை அடுத்து, தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, சிகிச்சைக்காக கடந்த 18ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகருக்குச் சென்றார். பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் பாதித்த சிவராஜ்குமாரின் சிறுநீரகப் பை அகற்றப்பட்டு அதற்கு பதிலாக, அவரது குடலை பயன்படுத்தி செயற்கை சிறுநீரகப் பை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நடிகர் சிவராஜ் குமாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனிடையே, சிவராஜ் குமாரின் வருகையை எதிர்பார்த்து இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். வாழ்வின் சிறிய தடையில் இருந்து மீண்டும் ஆரோக்கியமாக சிவராஜ் குமார் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேபோல், சிவராஜ் குமார் விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக் கொள்வதாக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். கடவுள் அதிக வலிமை மற்றும் பாதுகாப்பை சிவராஜ் குமாருக்கு கொடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். கன்னட திரைத்துறையினரும் சிவராஜ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.