’மனுஷி, BAD GIRL’ போன்ற படங்களுக்கு எழுந்த விமர்சனங்களும், எதிர்ப்புகளும் ஒரு தயாரிப்பாளராக தன்னை அதிகம் பாதித்துவிட்டதாக கூறியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், இனி படம் தயாரிப்பதை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். அவருடைய ஆடுகளம் திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றது மட்டுமல்லாமல், மொத்தமாக 6 தேசியவிருதுகளை வென்று குவித்தது. சிறந்த படைப்புகளை கொடுப்பதால் தமிழ்சினிமாவில் வெற்றிமாறனுக்கு என்று தனி முக்கியத்துவத்தை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் Grass Root Film Company என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். அவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் கடைசி இரண்டு திரைப்படங்களான மனுஷி மற்றும் பேட் கேர்ள் படங்கள் சர்ச்சையில் சிக்கியது மட்டுமில்லாமல், தனிப்பட்ட முறையில் அவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் 'மனுஷி' படம், மாநில அரசை மோசமாக சித்தரிப்பு செய்வதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்டியுள்ளதாகவும் எதிர்ப்புகளை சந்தித்து.
அதேபோல பேட் கேர்ள் திரைப்படம் குறிப்பிட்ட சமூக பெண்களை தவறாக சித்தரிப்பதாகவும், சிறுமி, சிறுவர்களை தவறாக படம்பிடித்து காட்டுவதாகவும் எதிர்ப்பை சம்பாதித்தது. எப்போதும் இல்லாத வகையில் படத்தினை தயாரித்த வெற்றிமாறன், படம் தொடர்பான கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், டீசரை பகிர்ந்து வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றோரும் விமர்சனத்திற்கு உள்ளாகினர். ஒருகட்டத்தில் விமர்சனங்கள் தனிமனித தாக்குதலாக மாறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்தசூழலில் ஒருவழியாக இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டுவரும் வேலையை தயாரிப்பாளராக வெற்றிமாறன் செய்துமுடித்துவிட்டார். ஆனாலும் இப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பு தனக்கு அதிகப்படியான மன உளைச்சலை கொடுத்துவிட்டதால், இனிமேல் படங்களை தயாரிக்கப்போவதில்லை என்றும், தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகயிருக்கும் நிலையில், செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன் தன்னுடைய மனுஷி, பேட் கேர்ள் திரைப்படங்களால் அதிகப்படியான மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினமான விசயம் என்றும் தெரிவித்தார்.
விழாவில் பேசிய வெற்றிமாறன், “தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினமான விசயம், இயக்குநராக இருப்பது எளிதான வேலையாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராக இருந்தால் டீசருக்கு கீழ்வரும் கமெண்ட்டிலிருந்து அனைத்திற்கும் பொறுப்பாக இருக்க வேண்டியுள்ளது. தற்போது ஒவ்வொருவரும் பேசும்போதுகூட இதற்கு என்ன கமெண்ட் வரபோகிறது என்றே யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது. ஏனென்றால் இது அனைத்தும் திரைப்படத்தின் வணிகத்தை பாதிக்கும் விசயமாக உள்ளது.
ஏற்கனவே ஒரு படம் (மனுஷி) நீதிமன்றத்தில் இருந்தது, தற்போது ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்குமென்பது தெரியவில்லை. பேர்ட் கேர்ள் படமும் திரும்பவும் மறுதணிக்கைக்கு போய்தான் வந்தது. டீசரை பார்த்துவிட்டு பலபேரிடம் இருந்து அதிக உணர்ச்சியுடன் விமர்சனம் வந்திருந்தது. ஆனால் படம் அப்படியானதாக இல்லை. அதேபோல மனுஷியும் 3 முறை தணிக்கைக்கு சென்று நீதிமன்றத்துக்கு சென்று இப்போதுதான் வந்திருக்கிறது. தயாரிப்பாளராக இருப்பது பெரிய சவாலாக இருக்கிறது. நான் ஒன்றும் பெரிய தயாரிப்பாளர் இல்லை. அங்கங்கு கடன் வாங்கி செலவு செய்யும் சின்ன தயாரிப்பாளர்தான். அதனால் என்ன யோசித்து இருக்கிறோம் என்றால் பேட் கேர்ள்தான் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் கடைசி படம். இதோட கடையை சாத்துறோம்” என தெரிவித்துள்ளார்.