விஜய், சூர்யா, கமலை தொடர்ந்து LCU-ல் இணைந்த ’ரவி மோகன்’.. வெளியான பிக் அப்டேட்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் LCU திரைப்படம் ஒன்றில் நடிகர் ரவி மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார்.
தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடித்துவரும் ரவி மோகன், சமீபத்தில் ’ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் நடிக்கும் ரவிமோகன், இரண்டாவது திரைப்படத்தில் யோகி பாபுவை வைத்து இயக்குநராகவும் அறிமுகமாகவிருக்கிறார்.
இந்நிலையில் ரவி மோகனின் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியிருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ரவி மோகனும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
LCU-ல் இணைந்த ரவி மோகன்..
மாநகரம், கைதி என்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் கைதியின் கதையை மையப்படுத்தியிருந்த லோகேஷ் LCU என்ற லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கியிருந்தார்.
லோகேஷின் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படமும் பெரிய ஹிட்டடிக்க LCU என்பதன் மீது ரசிகர்களுக்கு அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படமும் LCU-ல் இடம்பெற்ற நிலையில், LCU வட்டத்தில் தற்போது கைதி 2, ரோலக்ஸ், பென்ஸ் போன்ற திரைப்படங்கள் இணையவிருக்கின்றன.
பென்ஸ் திரைப்படம் லோகேஷ் இயக்கவில்லை என்றாலும், அப்படம் அறிவிப்பின் போதே அது LCU-ல் ஒரு அங்கமாக இருக்கும் என சொல்லப்பட்டது. பென்ஸ் திரைப்படம் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், நிவின் பாலி வில்லனாகவும் நடித்து உருவாகிவருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பென்ஸ் திரைப்படத்தில் ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரவி மோகனும் லோகேஷ் கனகராஜின் LCU-ல் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இத்தகவல் வெளியாகி ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர்.