இயக்குநர் சுந்தர் சி கமர்ஷியல் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர். ‘எந்த கருத்தும் வேண்டாம். கதையும் வேண்டாம். இரண்டரை மணி நேரம் திரையரங்கில் ஆடியன்சை நன்றாக சிரிக்க வைக்க வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் சுந்தர் சி திரைப்படங்களாகத்தான் இருக்கும்.
12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் வெளியாகி ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அது வெகுஜன சினிமாவாகவும் சுந்தர் சி படமாகவும் மட்டுமே இருக்க முடியும்.
1995 ஆம் ஆண்டு முறைமாமன் திரைப்படத்தில் ஆரம்பித்த அவரின் பயணம் 35 திரைப்படங்களைக் கடந்து தற்போதுவரை ஓடிக்கொண்டே இருக்கிறது. 35 திரைப்படங்களில் பெரும்பாலும் ஹிட் படங்கள்தான். நான்காவது திரைப்படத்திலேயே அதாவது முதல் படம் ரிலீஸ் ஆகி இரண்டு வருடத்திற்குள்ளேயே, உச்சநட்சத்திரமான ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பினைப் பெற்ற திறமைக்காரர் சுந்தர் சி. அந்தவகையில் ரஜினிகாந்த், ரம்பா, சௌந்தர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அருணாச்சலம் திரைப்படம் தாறுமாறு ஹிட்டானது.
தோல்விகளை பார்க்காதவரும் அல்ல சுந்தர் சி. என்னதான் தோல்விகள் வந்தாலும், அவரது ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் எப்போதும் எந்த காலத்துக்கும் பார்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.
இப்போது கூட அவரது ஆரம்பகால படங்களான மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், கிரி உள்ளிட்ட பல திரைப்படங்களை எப்போது வேண்டுமாலும் பார்க்கலாம்.. என்னவொன்று, எப்போதும் அவர் படத்தில் க்ளாமர் அதிகம் இருக்கும் என்பதால் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. பெண் உடலை போகப்பொருளாக வைப்பது, வணிக சினிமாவுக்கான இலக்கணம் என்று மாற்றியமைத்ததில், சுந்தர் சி படங்களுக்கு முக்கிய இடமுண்டு. அதனால் அவரது திரைப்படங்கள் மீது விமர்சனங்கள் அதிகமுண்டு.
இருப்பினும் குறிப்பிட்ட நாளில் படம்மெடுத்து முடித்து தயாரிப்பாளருக்கு அதிகம் செலவு வைக்காத இயக்குநர்களில் சுந்தர் சி பிரதானமான இடத்தில் இருப்பார். ஏனெனில், படப்பிடிப்பில் அத்தனை பிரிவுகளிலும் தேர்ந்தவராக இருப்பவர் அவர். திட்டமிட்டபடி, படப்பிடிப்பை முடித்துக்கொடுப்பவர். ஏதேனும் ஒரு தவறு நடந்தாலும் அதற்கான மாற்றுத்திட்டத்தை எப்போதும் கைகொண்டிருப்பவர். அவரது படங்களைப் போலவே, அவரது நேர்காணல்களும் சுவாரஸ்யத்திற்கும் சிரிப்புக்கும் கேரண்டி.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை, தான் செயல்படுத்திய ப்ளான் பி திட்டங்களை அவர் பேச பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஆனால், அவரே மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தன் பெயரை நல்ல இயக்குநர்கள் பட்டியலில் வைக்காதது குறித்து பேசிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. இன்றைய தினம் நடந்த வெற்றி விழாவில் சுந்தர் சி கூறுகையில், “கமர்ஷியல் படங்கள் பெரிய வெற்றி அடையும், ரசிகர்கள் ரசிப்பார்கள். கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருவார்கள். ஆனால் என் விஷயத்தில், எனக்கு உள்ளுக்குள் சின்னதாக வருத்தம் இருக்கிறது. அது என்னவெனில், எனக்கான பெரிய பாராட்டுகள் இருக்காது. நல்ல இயக்குநர்கள் என்ற லிஸ்ட் போட்டார்கள் என்றால் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தும் அதில் என் பெயர் இருக்காது.
சினிமா என்பது மிகப்பெரிய வியாபாரம். லட்சக்கணக்கானோர் ஈடுபடுகிற, அவர்களது வாழ்க்கையை நிர்ணயிக்கிற ஒரு வியாபாரம். மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம். அதைத்தாண்டி கோடிக்கணக்கான மக்கள் நம்மை நம்பி காசு கொடுத்து 3 மணிநேரம் அவர்களது கவலைகளை எல்லாம் மறந்து இருக்க வருகிறார்கள். என்னதான் கமர்ஷியல் திரைப்படங்கள் என்ற டேக் இருந்தாலும், 30 வருடங்களாக மக்கள் ஆதரவுடன் இதுவரையில் இருக்கிறேன். மனதிற்குள் இன்னும் சின்ன வருத்தம் இருக்கிறது. அதற்கான இடம் இன்னும் கிடைக்கவில்லையோ என்று. அதற்காக கவலையும் படுவதில்லை. என் கடன் பணி செய்து கிடப்பதுதான். அதுதான் என் கொள்கை” என்றார்.
உடன் இருந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, “சார், இந்த பொங்கலுக்கு மக்களையும் சரி, திரையரங்குகளையும் சரி... நீங்கள்தான் காப்பாற்றினீர்கள். கடந்த சம்மரிலும் (அரண்மனை 4) நீங்கள்தான் காப்பற்றினீர்கள். இதற்குமேல் என்ன வேண்டும்?” என்றார். நம் கருத்தும் அதுதான்.
அதேநேரம், ‘பெண்ணுடலை போகப்பொருள் போல ஆக்குவது, அது இருந்தால் வணிக ரீதியாக வெற்றியடையலாம் என நினைப்பது, இதற்காகவே பேய் படத்தில்கூட சம்பந்தமே இல்லாமல் சிறிய ஆடைகளுடன் ஹீரோயின்களை நடமாட வைப்பது, இரட்டை அர்த்த காமெடிக்களை அதிகப்படுத்துவது...’ என்றெல்லாம் இல்லாமல் சற்று பொறுப்புடன் படமெடுத்தால், நிச்சயம் சுந்தர் சி எனும் இயக்குநரை மக்கள் இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள்!