‘அமரன்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயனும், ‘சூரரைப் போற்று’ போன்ற தேசிய விருது வென்ற திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சுதா கொங்கராவும் இணையும் திரைப்படம் ‘பராசக்தி’.
சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் அறிவிப்பு டீசரானது நேற்று வெளியாகி படத்தின் பெயர் ‘பராசக்தி’ என உறுதிசெய்யப்பட்டது. இந்த அறிவிப்பு வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர். இணையதளம் முழுக்க பராசக்தி படமே பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா ரசிகர்களின் அளவுக்கடந்த அன்பிற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா கொங்கரா, விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான எதிரி படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தபடம் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், ’இறுதிச்சுற்று’ படத்தின் கதையை வைத்துக்கொண்டு எந்த தயாரிப்பு நிறுவனமும் படம் செய்ய முன்வராமல் பல ஆண்டுகள் திரிந்ததாக மாதவனே தெரிவித்துள்ளார். அந்தளவு சுதா கொங்கரா தனது அடுத்த படத்திற்காக நீண்ட போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் இறுதிச்சுற்று படம் வெளியாகி ரசிகர்கள் அப்படத்தை கொண்டாடித்தீர்த்தனர். அப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபேர் விருதை வென்றார் சுதா. அங்கிருந்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா, அப்படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்றார். பின்னர் அப்படத்திற்கு தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன.
அதற்குபிறகு ’பாவக்கதைகள்’ குறும்பட தொகுப்பில் ’தங்கம்’ என்ற தலைப்பில் அவர் இயக்கிய படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதனையடுத்து தற்போது ’பராசக்தி’ இயக்கவிருக்கிறார் சுதா கொங்கரா.
இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தின் அறிவிப்பு டீசரானது இறுதிச்சுற்று படம் வெளியான அதேதேதியில் ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்டது. எப்படி இறுதிச்சுற்றுக்கு பெரிய அன்பு கிடைத்ததோ அதே அளவான அன்பு பராசக்தி அறிவிப்புக்கும் கிடைத்திருப்பது சுதா கொங்கராவை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கும் அவர், “2016 ஜனவரி 29-ம் தேதியன்று என் ஆகச் சிறந்த படமான 'இறுதிச் சுற்று'-ஐ அனைவரும் ஏற்றுகொண்டீர்கள். இறுதிச் சுற்றும், நீங்களும்தான் என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றினீர்கள். நீங்கள் இல்லை என்றால் அது சுதாவின் இறுதிச் சுற்றாகவே உண்மையில் இருந்திருக்கும்.
இறுதிச்சுற்றுக்கு கிடைத்த அதே அளவு அன்பை, 'பராசக்தி' படத்தின் அறிவிப்பிற்கும் நீங்கள் கொடுத்ததை கண்டு மகிழ்கிறேன். படக்குழு சார்பாக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்திற்கு எனது மிகச்சிறந்ததையே கொடுக்க விரும்புகிறேன். அதைவிட கொஞ்சமும் குறைவாக இந்தப் படத்தை கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.