அமரன் திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, 2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கியிருந்தார்.
ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை எப்படியானது, மேஜர் பதவியில் இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலை என்ன?, அவர்களின் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்ட புதிய பார்வையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் மனதை வென்றிருந்தன.
ஒரு உண்மை கதாபாத்திரமான ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி அமரன் திரைப்படத்தை எடுத்திருந்த இயக்குநர் ராஜ்குமார், தன்னுடைய அடுத்த படத்திலும் அப்படியான ஒரு கதாபாத்திரத்தை கையில் எடுக்க விருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ரங்கூன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவியை வைத்து அமரன் என்ற உண்மை சம்பவத்தை தழுவிய திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் உடனான அடுத்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனுஷ் உடனான திரைப்படம் குறித்து பேசியிருந்த ராஜ்குமார் பெரியசாமி, நான் என்னுடைய அடுத்த திரைப்படமாக தனுஷ் சார் உடன் சேர்ந்து பணியாற்ற உள்ளேன். இது எனக்கே ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமரன் திரைப்படத்தை பொறுத்தவரையில் துணிச்சலுக்கான விருது வென்ற ஒரு உண்மை ஹீரோவை பற்றிய படமாக இருந்தது. தனுஷ் உடனான திரைப்படம், நமக்கு தெரியாத, சமூகத்தில் கலந்து வாழும் பேசப்படாத பல ஹீரோக்களை பற்றியது” என்று தெரிவித்துள்ளார்.
அப்படியானால் தனுஷ் உடனான படமும் உண்மை கதாபாத்திரமாக இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த காணொளியை தனுஷ் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.