தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரது அறையில் சந்தித்து பேசினார், சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “நான் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் படப்படிப்பை 90% புதுச்சேரியில் எடுக்கப்போகிறேன். இதற்கு அரசின் சில உதவிகள் தேவைப்படுவதால் அமைச்சரை சந்தித்தேன். எடுக்க இருக்கும் படத்தில் புதுச்சேரியை சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்த உள்ளேன்.
பெரியாரை நீக்கிவிட்டு இங்கு அரசியல் செய்ய முடியாது. அதனால்தான் சீமானும் பெரியாரை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்.
எதற்கும் ஒரு எடுத்துகாட்டு தேவைப்படும் அதற்காக ஒரு பெரிய மனிதரை இலக்காக வைத்தால்தான் அதற்கு அடுத்த இடத்திற்கு வர முடியும். உதாரணத்திற்கு, சிவாஜியாக வர வேண்டும் என நினைத்தால் ஜெய்சங்கர் அளவிற்காவது வரலாம் என ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அதுபோல் எம்ஜிஆரை மனதில் வைத்து கொண்டால் அந்த இடத்தை அடையாளம் என்பது அவர்களது (விஜய்) எண்ணமாக இருக்கலாம். விஜய் கையில் இருக்கும் சவுக்கை பார்த்தால் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அதே சவுக்கு போல்தான் உள்ளது.
உலகமே பாராட்ட கூடிய நடிகர் அஜித்துக்கு இந்த பத்மா பூஷண் விருது கிடைத்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அஜித்துக்கு இந்த விருது அளித்திருப்பது தூண்டிவிடுவது போலாகவே உள்ளது. மேலும், ‘குடும்பத்தைப் பார்’ என்று சொல்வதையும், ‘வேலையை விட்டு மாநாடிற்கு வா’ என்று சொல்வதையும் ஒரு ஸ்டண்டாகவே நான் பார்க்கிறேன்.
அஜித்தை கடவுளே தெய்வமே என அவரை பார்க்கும் ரசிகர்களிடையே, தங்களின் குடும்பத்தை பார் என்று அவர் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால், அவர் குடும்பத்தை பார் என்று சொல்வது சரியான விஷயம்” என பார்த்திபன் தெரிவித்தார்.