இயக்குநரான பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள "பாட்டில் ராதா" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றி மாறன், மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், குடி பழக்கத்தால் ஏற்பாடும் கேடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “நானும் மதுவை விரும்பி நேசித்துக் குடிப்பவன். ஆனால், ஒருநாள் கூட அந்த மது என்னை கண்ட்ரோல் செய்தது இல்லை. உதவி இயக்குநராக இருந்தபோது, மது அருந்த சென்றால் இரு கொசுவத்திகளோடுதான் உள்ளே செல்வேன். நாங்கள் பேச ஆரம்பித்தால் சினிமாவைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவோம். சிவாஜி, பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா என பேசிக்கொண்டே இருப்போம். எங்களுக்கு இருந்த பெரிய சிக்கலே அந்த கொசுத்தொல்லைதான். எங்கள் அருகில் 2 கொசுவத்திகளும் இருக்கும். நாங்கள் குடித்துக்கொண்டே பேசுவோம், பின் நான் பாட ஆரம்பிப்பேன். நான் பாட ஆரம்பித்த பிறகு எங்கிருந்தோ வேறு ஒரு மதுபாட்டில் எனக்கு வந்துவிடும்.
கல்லூரி படிக்கும்போது முதல் ஆண்டில் மது அருந்திவிட்டு பாடினேன். நான் பாடிய பாடல் ‘பொன்னப்போல ஆத்தா’ பாடல். எப்படி பாடினேன் எனத் தெரியவில்லை. எனக்கு முதல்பரிசு கொடுத்துவிட்டார்கள். இரண்டாவது ஆண்டும் முழு குடி; அதே பாட்டை மீண்டும் பாடினேன்; மீண்டும் முதல் பரிசு. மூன்றாம் ஆண்டும் அதேபாட்டு, முழு குடி, முதல்பரிசு. என்னுடைய குடி இருந்தபோது வாழ்க்கை சந்தோசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்துகொண்டே இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.