’தனி ஒருவன் 2' தொடங்குவது குறித்த தகவலை இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் ரவிமோகன், அர்விந்த் சுவாமி, நயன்தாரா நடித்து 2015இல் வெளியான படம் `தனி ஒருவன்'. இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் இன்று வரை சிறப்பான த்ரில்லர் படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ”இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது” என கடந்த 2023ஆம் ஆண்டு, `தனி ஒருவன்' படம் வெளியாகி எட்டு ஆண்டு நிறைவானதையொட்டி தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படப்பிடிப்பு 2024இல் துவங்கும் எனவும் கூறியிருந்தார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் `தனி ஒருவன் 2' துவங்கப்படவில்லை.
இதுதொடர்பாக சமீபத்திய விருது விழா ஒன்றில், மோகன் ராஜாவிடம் கேட்கப்பட்டது. "சில நாட்களுக்கு முன்புகூட இதற்கான மீட்டிங் அர்ச்சனா கல்பாத்தியுடன் நடந்தது. படத்திற்கான பட்ஜெட் இன்னும் முடிவாகவில்லை. அவர் இந்தக் கதையை கேட்டதும், ’இது சரியான நேரம் இல்லை’ எனக் கூறினார். நான் அவரிடம் `நீங்கள் நான் சொன்ன கதையைத்தானே கேட்டீர்கள்?' என்றேன். ’இந்தக் கதைக்கு அவ்வளவு செலவாகுமா’ எனக் கேட்டேன். ’இல்லை, நீங்க சாதாரணமான கதை சொல்லவில்லை. மேலும் இது சரியான நேரம் இல்லை. இது கண்டிப்பாக நடக்கும், ஆனால் கொஞ்சம் சினிமா துறையின் நிலை மேம்படட்டும்’ என்றார். நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நாம் நினைத்ததுபோல விரைவில் நடக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடக்கும்" என்றார்.
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சீக்குவல் படங்களில் ஒன்று `தனி ஒருவன் 2'. இது எப்போது துவங்கும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.