தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்டநாள் உடல்நலக்குறைவுக்குப் பிறகு மரணம் எய்திய செய்தி திரையுலகை உலுக்கியுள்ளது. மகன் மனோஜின் அகால மரணம் அவரை மனதளவிலும் உடலளவிலும் சிதைத்தது. நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறுதி மூச்சு விட்டார்.
தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது உடல்நிலை மோசமாகி மரணம் எய்தினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து வந்த பாரதிராஜா, தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் அகால மரணத்திற்குப் பிறகு மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளானார். மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் முற்றிலுமாக முடங்கிப் போன அவர், சில மாதங்கள் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
கடந்த டிசம்பர் இறுதியில் சென்னை திரும்பிய அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நிபுணர் குழுவின் கண்காணிப்பில் இருந்ததற்கு பின் வீடு திரும்பினார். ஆனால் வீட்டிலும் தனிப்பட்ட முறையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.
விரைவில் உடல்நலம் தேறி கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
இயக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாப்பட்ட பாரதிராஜா, சினிமா மீதான ஆர்வம் காரணமாக அரசு வேலையை உதறிவிட்டு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர். இங்கு பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
நடிகராகும் ஆசையில் சென்னை வந்த பாரதிராஜாவுக்கு, திரையில் ஏற்பட்ட அனுபவங்களே அவரை இயக்குநராக மாற்றியது. பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். அவருடைய முதல் படமே, அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.
அரங்கத்திற்குள் நடத்தப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை, வெளியே அழைத்துவந்த பெருமைக்குரியவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவிற்குப் பல நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் அவரையே சேரும். அப்படி தனது படங்கள் மூலம் அறிமுகமாகும் நடிகைகளுக்கு பெரும்பாலும் 'ஆர்' என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அவர்.
இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பாரதிராஜா பல படங்களில் முத்திரை பதித்துள்ளார். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கே.பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.
பாரதிராஜா திரைப்படங்கள் மட்டுமன்றி சீரியலையும் இயக்கியிருந்தார். ‘தெக்கத்திப் பொண்ணு' என்ற சீரியலை அவர் இயக்கியிருந்தார். தன் அம்மாவின் பெயரில் தான் எடுத்த 'கருத்தம்மா' படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, தன் தாயாரையே விருது வாங்கச் செய்தார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இயக்கியுள்ளார். 16 வயதினிலே (1977), முதல் மரியாதை (1985), சிகப்பு ரோஜாக்கள் (1978), நிழல்கள் (1980), அலைகள் ஓய்வதில்லை (1981), மண் வாசனை (1983), கிழக்குச் சீமையிலே (1993) ஆகியவை அவருடைய இயக்கத்தில் காலத்தால் அழியாத படைப்புகளாகும்.