லியோ திரைப்படத்தின் வசூல்  web
சினிமா

விஜயின் ’லியோ’ பட வசூல் வெறும் ரூ.160 கோடி தானா? பொய் சொன்னாரா தயாரிப்பாளர்? உண்மை என்ன?

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வருமான வரி தாக்கல் படிவம் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Rishan Vengai

  • விஜயின் லியோ திரைப்படத்தின் வசூல் குறித்து வெளியான தகவல்

  • லியோ படம் வெறும் 160 கோடி ரூபாய் தான் வசூலா?

  • தயாரிப்பாளர் வரிமான வரி தாக்கலில் வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக ஹைப் ஏற்றப்பட்ட படம் என்றால் அது நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் தான்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் - விஜய் 2வது முறையாக கூட்டணி அமைத்த இந்தப் படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2023-ம் ஆண்டு வெளியானது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாக களமிறங்க, அனிருத் இசையமைக்க, கிளாசிக் ஜோடியான த்ரிஷா நடிக்க LCU கனெக்ட் என்ற முடிச்சு போட... பெரிதும் ஹைப் ஏற்றப்பட்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது.

லியோ

தயாரிப்பாளர் தரப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, முதல் நாளில் 148 கோடி வசூலித்து 12 நாட்களில் மொத்தமாக 540 கோடி ரூபாயை வசூல் செய்தது லியோ. தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக உலக அளவில் இத்திரைப்படம் சுமார் 620.5 கோடி ரூபாயை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதிகப்படியான வசூலால், 2023 ஆண்டிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக சம்பவம் செய்தது லியோ படம்.

ரஜினியின் கூலி திரைப்படம்

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் கூலி திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 151 கோடி ரூபாய் வசூலித்து, முதல் நாளில் அதிகம் வசூல் செய்த விஜயின் லியோ திரைப்படத்தை முறியடித்து சாதனை படைத்தது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நிலையில், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே சமூக வலைதளத்தில் மோதல் வெடித்துள்ளது.

160 கோடி தான் வசூலா? வெடித்த மோதல்..

லியோ திரைப்படத்தில் கிடைத்த வருமானம் குறித்து வரிமான வரி தாக்கலில் குறிப்பிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படம் திரையரங்குகளில் ரூ.160 கோடி மட்டுமே வசூலித்ததாக குறிப்பிட்டிருப்பதாகவும், லியோ படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.124 கோடி, ஆடியோ உரிமை ரூ.24 கோடி, தென் இந்திய சேட்லைட் உரிமம் ரூ.72 கோடி, இந்தி உரிமை ரூ.24 கோடி என சேர்த்து மொத்தமாக லியோ திரைப்படத்தின் மூலம் தனக்கு ரூ.404 கோடியே 56 லட்சம் வருமானம் வந்திருப்பதாக வரித்துறையில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தகவலை அடிப்படையாக வைத்துதான் தற்போது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளத்தில் மோதல் வெடித்துள்ளது. லியோ மொத்த வசூலே 160 கோடிதான் என்றால், முதல் நாளில் 151 கோடி வசூலித்த கூலிதான் வெற்றி படம் என்றும், லியோவின் மொத்த வருமானமான 404 கோடியை 4 நாட்களிலேயே கூலி முறியடித்து விட்டதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் கருத்திட்டு வருவதால் ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் மோதல் வெடித்துள்ளது.

உண்மை என்ன? தயாரிப்பாளர் சொன்ன தகவல்!

லியோ திரைப்படத்தின் வசூல் குறித்து வெளியான தகவலால், விஜயின் உச்சபட்ச வசூல் வெறும் 320 கோடிதான் என்றும், அவரை பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என்று சொல்லாதீர்கள் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உண்மை என்ன? லியோ படத்தின் தயாரிப்பாளர் சமர்பித்த வரிமான வரி தாக்கலில் உண்மை இருக்கிறதா என்பது குறித்து படத்தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன், ”தயாரிப்பாளர் லலித் குமார் வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்த தகவலில் தன்னுடைய தனிப்பட்ட வருமானத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். படத்தின் மொத்த வசூல் 600 கோடியில் தன்னுடைய ஷேர் 160 கோடி என்று தான் அவர் குறிப்பிட முடியும், அவருடைய வருமான வரி தாக்கலில் படத்தின் மொத்த வசூலையும் குறிப்பிட முடியாது. இதனை அடிப்படையாக வைத்து லியோ படத்தின் வசூலை போலியானது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை“ என்று கூறியுள்ளார்.