துரந்தர் 2 எக்ஸ் தளம்
சினிமா

துரந்தர் 2 | BookMyShowவில் குவியும் டிக்கெட்கள்.. முதல்நாள் வசூலே இத்தனை கோடியா?

`துரந்தர்2 தி ரிவென்ஞ்' பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Prakash J

`துரந்தர்2 தி ரிவென்ஞ்' பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், முன்னோட்டக் காட்சிகளில் இருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால், இப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ரன்வீர் சிங், அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கி கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வெளியான படம் `துரந்தர்'. பாகிஸ்தான் தீவிரவாத குழுவுக்குச் செல்லும் ஓர் இந்திய உளவாளியின் சாகசங்கள் என்ற பெயரில் கற்பனையும், சில வரலாற்று நிஜ சம்பவங்களையும் இணைத்துப் படத்தை உருவாக்கி இருந்தனர். திரையரங்கில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வசூலிலும் ரூ,1,300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Dhurandhar 2

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர்2 தி ரிவென்ஞ்' பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக, தொழில்நுட்ப மற்றும் உள்ளடக்க விநியோகச் சிக்கல்கள் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் பிராந்திய கட்டண முன்னோட்டக் காட்சிகள் பரவலாக ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதித்யா தார் சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோரினார். அதேநேரத்தில் வேறு சில இடங்களில் வெளியான, முன்னோட்டக் காட்சிகளில் இருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால், இப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' திரைப்படம் அதன் முதல் நாளில் 8,928 காட்சிகளில் ஓடி, பிற்பகல் 3 மணிவரை நிகரமாக ரூ. 36 கோடி வசூலித்துள்ளது. செவ்வாயன்று கட்டண முன்னோட்டக் காட்சிகளில் ரூ.43 கோடி வசூலித்த நிலையில், இதன்மூலம் இந்திய பாக்ஸ் ஆபீஸில் இப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ. 51.60 கோடியாகவும், மொத்த வசூல் இதுவரை ரூ.79 கோடியாகவும் உயர்ந்துள்ளது. முன்னதாக, சாக்னில்க் தகவலின்படி, 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' (துரந்தர் 2) திரைப்படம், புக்மை ஷோவில் ஒரு மணி நேர டிக்கெட் விற்பனையில் அதிவேகமாக விற்பனையாகும் படமாக ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

Dhurandhar 2

இப்படம் வெறும் ஒரு மணி நேரத்தில் 109,000 டிக்கெட்டுகளை விற்று, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 107,600 டிக்கெட்டுகள் என்ற உச்சத்தை எட்டியிருந்த 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த மைல்கல், 'துரந்தர் 2' படத்தைச் சுற்றியுள்ள பெரும் தேவையையும், முன்னெப்போதும் இல்லாத எதிர்பார்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது. முழுநாள் வசூல் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, நாடு முழுவதும் முன்பதிவுகள் அதிகரித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன.