துல்கர் சல்மான் நடிப்பில் `லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வெங்கி அட்லூரி. இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் `சார்/வாத்தி'. இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கூறியிருக்கிறார் வெங்கி. ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள `மாஸ் ஜாதரா' அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக ரவிதேஜாவை பேட்டி எடுக்கும் தொகுப்பாளராக கலந்து கொண்ட வெங்கி அட்லூரி, ரவி தேஜாவுடனான தன் நட்பை பற்றி இதில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் வெங்கி "சார் படத்தின் கதையை நான் முதலில் ரவி தேஜா அண்ணாவுக்கு தான் சொன்னேன். அதற்கு அவர் `வெங்கி நான் இவ்வளவு காலம் பிஸியாக இருக்கிறேன். உன்னால் காத்திருக்க முடியும் என்றால் காத்திரு. இல்லை என்றால் வேறு நடிகரை நடிக்க வை. யாரையும் காத்திருக்க வைப்பது எனக்குப் பிடிக்காது என்றார்.
அதற்கு சில மாதங்கள் கழித்து தனுஷ் சாருடன் படம் ஒப்பந்தமானது. அதனை சொல்ல ரவி அண்ணனுக்கு மெசேஜ் அனுப்பினேன். உடனே வீடியோ காலில் வந்து 'அவர் (தனுஷ்) சிறப்பான நடிகர். அருமையாக படத்தை எடு. ஆனால் இதை நீ என்னிடம் சொல்கிறாய் பார், அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்றார். அதன் பின் படம் வெளியானதும் "படம் மிக சிறப்பாக இருக்கிறது. என்னால் இப்படி நடித்திருக்க முடியாது" எனவும் கூறினார் ரவி அண்ணா. இவ்வளவு வெளிப்படையாக கூறும் நபர் ரவி தேஜா" எனக் கூறியுள்ளார்.