பிரஷாந்த் நீல் - ஜூனியர் என் டி ஆர் படம் நிறுத்தமா? | NTRNeel | Prashanth Neel | N T R Jr
`உக்ரம்', `KGF', `சலார்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவர் தனது அடுத்த படமாக ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். டிராகன் என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. ஹீரோ ஜூனியர் என் டி ஆர் ஏப்ரல் 22ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால் இரண்டே வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த இடைவெளி பற்றி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நவீன் காந்தாரா சேப்டர் 1 நிகழ்வில் கூறிய போது "அடுத்த மாதம் (அக்டோபர்) படப்பிடிப்பு மீண்டும் துவங்கி எந்த தடையும் இல்லாமல் நடக்கும்" எனக் கூறினார். ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த சூழலில் பிரஷாந்த் நீல் - ஜூனியர் என் டி ஆர் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் நிறுத்தப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இது பற்றி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் நவீன் சமீபத்தில் கூறிய போது "இந்த இரண்டு மாத இடைவெளி எதிர்பாராதது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும்" என்றிருக்கிறார்.
ஆனால் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த ஜூனியர் என் டி ஆருக்கு, திருப்தி ஏற்படவில்லை எனவும் கதையில் மாற்றம் செய்யப்பட உள்ளது எனவும் சொல்கிறது டோலிவுட் வட்டாரம். உறுதிப்படுத்தப்படாத இந்த தகவல்கள் ஒரு பக்கம் உலாவிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில், சில வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். அதில் பிரஷாந்த் நீல் "நான் அவர்களை (ஜூனியர் என் டி ஆர் தரப்பு) தொடர்பு கொள்ளவில்லை. அவர்களே என்னை அழைத்து என்னுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்கள்" எனக் கூறும் வீடியோ ஒன்றும், தயாரிப்பாளர் நவீன் "ஜூனியர் என் டி ஆர் தான் பிரஷாந்த் நீல் பெயரை பரிந்துரை செய்தார்" எனக் கூறும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதனை பகிர்ந்து ஒரு படம் என்பது தானாக உருவாக்க வேண்டும், இப்படி இயக்குநரை வற்புறுத்தி அழைத்து வந்தால் இப்படித்தான் ஆகும் என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இன்னொரு புறம் இப்படியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை எனவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இப்படத்தின் நிலைமை என்ன என்பதை படக்குழு தரப்பு அறிவித்தால் தான் தெரியும்.