நாகார்ஜுனா எக்ஸ் தளம்
சினிமா

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா வழக்கு.. உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் ஆளுமை உரிமைகளை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Prakash J

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் ஆளுமை உரிமைகளை வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் படங்கள், பெயர்கள், குரல்கள் ஆகியன அவர்களின் அனுமதியின்றி, ஆன்லைனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏற்கெனவே பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் பாதுகாப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் தனது பெயர், குரல், படங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில், அதற்கு டெல்லி நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் 72 மணி நேரத்திற்குள் அதுதொடர்பான உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

nagarjuna

இதுதொடர்பாக நீதிமன்றம், ‘ஒருவரின் ஆளுமை உரிமைகளை தவறாகப் பயன்படுத்துவது அவர்களின் பொருளாதார நலன்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல், கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் மீறுகிறது. நாகார்ஜுனா நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது பெயர், தோற்றம், குரல் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்பட்டால், அது ஏராளமான மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்த நீதிமன்றம், அடையாளம் காணப்பட்ட URLகளை 72 மணி நேரத்திற்குள் தடுப்பதை உறுதி செய்யுமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.