Vijay Jana Nayagan
சினிமா

விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. சொன்ன நாளில் வெளியாகுமா ஜனநாயகன்?.. தொடரும் சிக்கல்!

விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியிருக்கும் `ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

PT WEB

விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தணிக்கைக் குழு பரிந்துரைகளை பின்பற்றி மாற்றங்கள் செய்யப்பட்டும் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக இனி கவனத்தை முழுவதுமாக அரசியலில் செலுத்தவுள்ளதாக கூறிய விஜய், ஜனநாயகன் படமே தனது கடைசிப் படம் என்று அறிவித்துள்ளார்.

Jana Nayagan

அவரின் கடைசி படமான ‛ஜனநாயகன்' ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. மேலும் அதிக எண்ணிக்கையிலான பேர் பங்கேற்ற நிகழ்ச்சி என்ற சாதனையையும் படைத்தது.

விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியிருக்கும் படம் `ஜனநாயகன்'. ஹெச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கியுள்ள தருணத்தில், அந்த படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜனநாயகன் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், படம் கடந்த டிசம்பர் மாதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

ஜனநாயகன்

அந்தப் படத்தை தணிக்கைக் குழு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பார்த்து சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் பரிந்துரைத்தது. அதன்பின் தணிக்கைக் குழு சொன்ன மாற்றங்களை செய்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பிய பிறகும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதன் காரணமாக ஜனநாயகம் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகுமா அல்லது வெளியீடு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் வெளியீட்டு தேதிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே தணிக்கை சான்றிதழ் பெற்று பல படங்கள் வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.