சீனாவில் வெளியாகும் மகாராஜா web
சினிமா

சீனாவில் 40,000 திரைகளில் மாஸ்ஸாக ரிலீஸ் ஆனது மாகாராஜா.. பாகுபலியின் சாதனையை மிஞ்சுமா!?

மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகி வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Angeshwar G

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது மகாராஜா திரைப்படம். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு படத்தை கையாண்ட இயக்குநர் நித்திலன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து கிளைமேக்ஸில் ரசிகர்கள் எல்லோருடைய மனதையும் வென்றிருந்தார். படத்தில் நடத்திருந்த விஜய் சேதுபதி, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய சிறந்த நடிப்பை கொடுத்து படத்திற்கு உயிரூட்டியிருந்தனர்.

சீனாவில் வெளியாகும் மகாராஜா

மிகப்பெரும் வரவேற்பினைப் பெற்ற மகாராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரூ.110 கோடியை வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. ஓடிடி-ல் வெளியான பிறகும் அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து பான் இந்தியா திரைப்படமாக உருமாறியது. அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மகாராஜா திரைப்படமானது சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகும் என படத்தின் வெளியீட்டு உரிமையை வைத்திருக்கும் ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் மற்றும் நைன் நாட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவை யி ஷி பிலிம்ஸ் (Yi Shi Films) ஆகியவை உறுதிப்படுத்தின. இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று வெளியானது.

சீனாவில் வெளியான இந்திய சினிமாக்கள் மற்றும் அதன் திரை எண்ணிக்கையை ஒப்பிடுகையில், விஜய சேதுபதியின் மகாராஜா திரைப்படம் இரண்டாவது அதிகப்படியான திரைகளை கொண்டுள்ளது. சீனாவில் வெளியான இந்திய சினிமாக்களில், ரஜினியின் 2.O திரைப்படம் 48,000 திரைகளை கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அதிகபட்சமாக 40,000 திரைகளில் மகாராஜா வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த இடத்தில் பாகுபலி 2 (18,000 திரைகள்), தங்கல் (9000 திரைகள்) முதலிய திரைப்படங்கள் இருக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாவது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “மகாராஜா சீனாவில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த சாதனையைப் பற்றி பெருமைப்படுவதோடு, அங்கும் பிரம்மாண்ட வெற்றி பெரும் என நம்புகிறேன். விஜய் சேதுபதிக்கும், இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கும் வாழ்த்துகள். எல்லை தாண்டிய ஒரு படத்தை உருவாக்கியதற்காக சுதன் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மகாராஜா paid previewsகளில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.5.4 கோடியை வசூலித்துள்ளது. மேலும், சீனாவில் மகாராஜா நல்ல வசூலை செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் பாகுபலி மட்டுமே ஒரே தென்னிந்திய திரைப்படம். பாகுபலி இரண்டாம் பாகம் ரூ. 80.56 கோடியை வசூலித்துள்ளது.

மகாராஜா நல்ல வசூலை மேற்கொள்ளும் பட்சத்தில், சீனாவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில், மகாராஜாவும் இணையும் வாய்ப்பு உள்ளது. preview காட்சிகளைக் கண்ட ரசிகர்களின் விமர்சனங்கள் நேர்மறையாகவே இருந்ததால் வசூலுக்கும் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.