ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள படம் `ராமாயணா'. இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 24ம் தேதி ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாக ட்ரெய்லர் அறிமுக விழா நேற்று இரவு டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய யஷ் "இந்தப் படத்தின் ஒரு பாகமாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதற்கான எல்லா பாராட்டுகளும் நமித் மல்ஹோத்ராவுக்கு தான் போக வேண்டும். இப்படி ஒரு படம் நடக்கவும், அதில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும் அவரே காரணம், அதற்கு நன்றி. அவர் இல்லை என்றால் இது நடந்திருக்காது. இது இந்தியாவின் கனவு. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்திருப்பது ஒரு நோக்கத்தை தான். நம்முடைய கதையை உலக அரங்கில் வைப்பது தான் அந்த நோக்கம்.
எனவே எங்கள் எல்லோரின் தனிப்பட்ட ஆர்வங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஸ்ரீராம சந்திர பிரபுவின் கதையை உலக பார்வையாளர்களுக்கு சொல்கிறோம். மேலும் நம் நாட்டிலும் அவரை கொண்டாட இருக்கிறோம். இந்த நோக்கத்திற்கு, தைரியத்திற்கும் வாழ்த்துக்கள் நமித். நிதேஷ் சார், இந்தப் பாத்திரத்தின் நுணுக்கங்களை புரிந்து கொள்ள வழிகாட்டியதற்கு நன்றி. ரன்பீர் நீங்கள் ஒப்பற்ற நடிகர். உங்களை எப்படி அர்பணித்திருக்கிறீர்கள், என்ன மாதிரி மேஜிக் செய்திருக்கிறீர்கள் என இந்தியா விரைவில் அறிந்துகொள்ளும். சாய் பல்லவி மிக சிறந்த நடிகை. சீதாவாக அவர் நடித்திருப்பதை அனைவரும் பார்க்க வேண்டும்." என்றார்.