தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த மூன்று ஆண்டுகளில் மாவீரன், அமரன் மற்றும் மதராசி ஆகிய படங்களின் மூலம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளார். இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது நேற்றில் இருந்து இணையத்தில் உலவும் வீடியோ ஒன்று.
பாலிவுட்டில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, தனித்துவமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கிய `Devdas', `Black', `Ram-Leela', `Bajirao Mastani', `Padmaavat', `Gangubai Kathiawadi' எனப் பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவை. நேற்றிலிருந்து வைரலாக சுற்றி வரும் அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் மும்பையிலுள்ள சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்திற்கு வருகை தந்தது பதிவாகியுள்ளது.
இது சஞ்சய் லீலா பன்சாலியின் வரவிருக்கும் படத்திலா அல்லது எதிர்காலத் திட்டத்தில் அவர்கள் இணைந்து பணியாற்றுவது குறித்ததா என்ற யூகங்களை கிளப்பியுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு `மாவீரன்' படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டுக்கு முன் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கு நடிகர் அதிவி சேஷ் சிவாவின் பாலிவுட் என்ட்ரி பற்றி பேசி இருந்தார். அந்த நிகழ்வில் "இவர் தெலுங்குடன் சேர்த்து, விரைவிலேயே இந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார். சாரி சார் இந்த உண்மையை இங்கு உடைத்துவிட்டேன்" எனக் கூறி இருப்பார். இந்த பழைய வீடியோவை இப்போது, சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்துக்கு சிவா சென்ற நிகழ்வோடு தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர்.
ஆனாலும் இது சார்ந்த எந்த அறிவிப்போ, இவ்விருவரும் சந்தித்த புகைப்படங்களோ எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த சந்திப்பு உண்மையாகவும், அவர்கள் இணைந்து பணியாற்றுவது உறுதியானால், விரைவில் சிவாவின் பாலிவுட்டி என்ட்ரி நடக்கலாம். சஞ்சய் லீலா பன்சாலி ஆலியா பட் நடித்த `கங்குபாய்' மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக `ஹீரமண்டி: தி டயமண்ட் பஜார்' சீரிஸையும் இயக்கி வெளியிட்டார். தற்போது ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் நடிக்கும் `லவ் & வார்' படத்தை உருவாக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் `பராசக்தி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தாக வெங்கட் பிரபு மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.