இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் ஷாருக்கான். இவர் சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அங்கு ரசிகை ஒருவருக்கு அவர் தந்த பதில் தற்போது வைரலாகப் பேசப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சில பாடல்களுக்கு நடனமாடியதுடன், பார்வையாளர்களுடன் கலந்துரையாடவும் செய்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர் ஷாருக்கானிடம், ‘என் கணவரைவிட உங்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐ லவ் யூ’ என்று கூறினார்.
இதைக் கேட்ட ஷாருக்கான் சிரித்தபடி, "இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம். உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். உங்கள் கணவரும் அவ்வாறே உணர்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னை நீங்கள் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். அருகில் பார்க்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித்தர மாட்டேன். வீட்டிற்கு வாடகை தர மாட்டேன்.
உங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை நான் கவனிக்கவோ, அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவந்து விடவோ மாட்டேன். உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் துடித்துப்போக மாட்டேன். உங்கள் கஷ்டத்தில் பங்குபெற மாட்டேன், உங்களோடு சண்டையிடமாட்டேன், உங்களை சந்தோஷமாக வைத்திருக்கப் போவதில்லை. இது எதையும் செய்யாத என்மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருந்தால், அவை அனைத்தையும் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்தளவு காதலிக்க வேண்டும்.
நீங்கள் என்னை ரசித்தால் மட்டும் போதும்" என்று அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி அனைவரின் முன்னிலையிலும் அந்தப் பெண்ணை அவரது கணவருக்கு ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல வைத்தார் ஷாருக்கான். இவரது இந்த அன்பான அணுகுமுறை பலராலும் பாராட்டப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டும் வருகிறது.