அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய `ப்ரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். துல்கர் சல்மான், நானி, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரவேற்பை பெற்றார். தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
ஆமீர்கான் தயாரிப்பில் அவரது மகன் ஜுனைத் கான் நடிப்பில் சுனில் பாண்டே இயக்கியுள்ள `ஏக் தின்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படம் பாலிவுட்டில் அவரது அறிமுகப்படமாக அமைந்துள்ளது. 2016ல் வெளியான தாயலாந்து நாட்டு படமான `One Day' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது இந்தப் படம். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியில் முதல் படமாக `ஏக் தின்' வெளியாகும் அதே நேரம், சாய் பல்லவி இன்னொரு பிரம்மாண்டமான பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகும் ராமாயணா படத்தில் சீதையாக நடிப்பது சாய் பல்லவி தான். படத்துக்கு ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்து ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது.