இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவர் தற்போது அவரது மகன் ஜூனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் சுனில் பாண்டே இயக்கியுள்ள `Ek Din' படத்தை தயாரித்துள்ளார். இப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அது தொடர்பாக பல பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் நடிக்கும் அடுத்த படம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்னவர் "நான் தயாரித்துள்ள EK DIN படம் வெளியான பின்னர், நான் நடிக்கும் படம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். நான் கடந்த எட்டு மாதங்களாக பல கதைகளை கேட்டு வருகிறேன். நிறைய கதைகள் பிடித்திருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்கலாம் என இருக்கிறேன். ஆனால் என்ன படம்? யார் இயக்குநர் என்பது இன்னும் முடிவாகவில்லை. அடுத்த ஒரு மாதத்திற்குள் அதனை முடிவு செய்துவிடுவேன். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் துவங்கி விடுவேன்." என்றார்.
மேலும் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பதாக சொல்லப்பட்ட தாதா சாஹேப் பால்கே பயோபிக் பற்றி கேட்கப்பட "தாதா சாஹேப் பால்கே கதை மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடியது. அதனை ராஜூ (ராஜ்குமார் ஹிரானி) எழுதி வந்தார். மூன்று டிராஃட் எழுதியும் அவருக்கு அந்த ஸ்க்ரிப்டில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பின்னர் அதில் பணியாற்றலாம் என முடிவு செய்து அந்தக் கதையை ஓரமாக வைத்துவிட்டார். இப்போதைக்கு அவர் `3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளில் இருக்கிறார். அந்தக் கதையை நான் கேட்டேன் மிக சிறப்பாக இருந்தது. நகைச்சுவை நிறைந்த ஒரு வழக்கத்துக்கு மாறான படமாக இருக்கும்.
சென்ற பாகத்தில் இருந்த அதே பாத்திரங்களின் வாழ்க்கை 10 வருடங்கள் கழித்து எப்படி இருக்கிறது என கதை செல்லும். இன்னும் ஸ்க்ரிப்ட் வேலைகள் இருக்கிறது, அது முடிந்த பின்னர் நடிப்பேன். மேலும் அப்படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். இன்னொரு முறை Phunsukh Wangdu-வாக மாற வேண்டும்." என்றார் அமீர்கான்.