விக்ரம் வீடியோவை பயன்படுத்தி போதை விழிப்புணர்வு.. அசத்திய கேரள போலீஸ்! | Vikram
நடிகர் விக்ரம், தனது 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதனை அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம்தான் படம் பிடித்திருந்தார். இந்த வீடியோ வெளியாகி பலரும் அந்த வீடியோவுடன் தங்களுடைய வீடியோக்களை இணைத்து பகிர வீடியோ வைரலானது.
தற்போது இந்த வீடியோவை கேரளா போலீஸார் க்ரியேட்டிவாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக இந்த வீடியோவை வடிவமைத்து அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். "நாங்கள் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறோம்" (We keep an eye on you always) என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைக் கேரளா போலீஸார் பகிர்ந்துள்ளனர்.
அத்துடன், "16 வயது அல்லது 60 வயது என்பது பிரச்னையில்லை; போதைப்பொருள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோவில் `Diés Iraé', `Kalamkaval', `Kishkindha Kaandam' போன்ற படங்களில் நடித்த ஜிபின் கோபிநாத் நடித்துள்ளார். நடிகராக, முன்னர் இவர் காவல் அதிகாரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் விக்ரம், அதனைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

