இந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பார்வதி. தற்போது இவர் அஜித் பால் இயக்கத்தில் STROM என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த சீரிஸ் தொடர்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்பேட்டியில், `துரந்தர்' போன்ற பிரச்னைக்குரிய படங்கள் வருவது குறித்து கேட்டப்பட்டது. அதற்குப் பதில் அளித்த பார்வதி, "இங்கு Mainstream படங்களை விட, பிராந்திய மொழிப் படங்கள் மிகத் தைரியமான கதைகளைச் சொல்கிறது. இதில், நான் விநோதமாகப் பார்ப்பது என்னவென்றால் Mainstream படங்களை எடுக்கும் நபர்கள் `எங்களால் தைரியமான கதைகளைச் சொல்ல முடியாது. ஏனென்றால், அதில் பணம் சம்பந்தப்பட்டிருக்கிறது' எனச் சொல்வதைத்தான். உங்களிடம் பணம் இருக்கிறது. நீங்கள்தான் தைரியமான விஷயங்களைச் செய்ய வேண்டும். ஆனால், பெரிய பணபலம் இல்லாத நாங்கள் செய்கிறோம். கணக்கே தலைகீழாக இருக்கிறதே?
உங்களுக்குப் பேராசை இருப்பதால் நீங்கள் தைரியமாக இல்லை. முதலாளித்துவ அமைப்புக்கு நீங்கள் இரையாகிவிட்டீர்கள். உங்களுக்கு நிறைய பணம் வேண்டும், அதனால் கண்ணை மூடிக் கொண்டு மக்களைப் பாதிக்கும்படியான பிரச்னைக்குரிய படங்களை உருவாக்குகிறீர்கள். உருவாக்குங்கள். ஆனால் அந்த நினைப்புடனேயே வாழுங்கள். இதுபோன்ற படங்களுக்குப் பெரிய பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பது இந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு. அவற்றை நாம் பார்க்க மறுக்கிறோம், மிக எளிமையாகக் கண்களை மூடிக்கொண்டு கடக்கிறோம். இங்கு சாதியம், வாழ்க்கை முறையாக இன்னும் இருக்கிறது. எனவே, அதற்கான பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மட்டும் நாம் ஏன் அதிர்ச்சியாகிறோம்? இந்திய கலாசாரம் சிறந்தது எனச் சொல்லும் அதேவேளையில், இதுவும் அதன் பாகம்தான் என ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது பார்வையாளர்களும் துணிவுடன் இருக்க வேண்டும். `இதுபோன்ற மோசமான படங்களை நாங்கள் பார்க்க மாட்டோம்' என உறுதியாகச் சொல்ல வேண்டும். அவர்களிடம் இருக்கும் ஒரே வல்லமை, இத்தகைய படங்களுக்குச் செலவழிப்பதைத் தவிர்ப்பது. அதைத் தாண்டிய விஷயங்களைத் தயாரிப்பாளர்கள்தான் செய்ய வேண்டும்.
பிரச்னைக்குரிய படங்களில் இருந்து சம்பாதிக்கும் பணத்தின் மூலமாவது நல்ல படங்களை ஆதரிக்கலாமே. இதன்மூலம் உங்கள் ஆன்மாவின் ஒரு பகுதியையாவது சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.