துருவ் சர்ஜா, ரேஷ்மா நானய்யா, ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரேம் இயக்கி வரும் கன்னட படம் `KD: The Devil'. இப்படத்தில் இடம்பெற்ற பாடல், Sarse Ninna Seraga Sarse. இப்படம் பாண் இந்திய வெளியீடாக அனைத்து மொழிகளிலும் வெளியாவதால் தமிழில் 'திற நீ எந்தன் தரணி திற நீ' என்றும், 'Sarke Chunar Teri Sarke' என இந்தியிலும் தயாரானது. பாடல் சஞ்சய் தத்தாலும், நோரா ஃபதேஹியின் நடனத்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்பாடலின் இந்தி பதிப்பில் இடம்பெற்ற ஆபாச இரட்டை அர்த்த வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் பாலியல் ரீதியாகத் தூண்டும் வகையிலும் இருப்பதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், பாடலின் நடன அசைவுகளும், காட்சியமைப்பும் நாகரிகத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (AICWA) உட்பட பலரும் திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC), மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் டெல்லி போலீஸ் சைபர் செல் ஆகியவற்றிடம் இப்பாடலை அனைத்துத் தளங்களில் இருந்தும் உடனடியாகத் தடை செய்ய வலியுறுத்திப் புகார்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தி உட்பட இப்பாடலின் அனைத்து மொழிப் பாதிப்புகளும் அனைத்துத் தளங்களில் இருந்து நீக்கப்பட்டன. சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில், தற்போதைய ஆபாச வரிகளை மாற்றிவிட்டு, `சுத்தமான’ வரிகளுடன் இந்தப் பாடலின் புதிய பதிப்பை, மன்னிப்பு அறிக்கையுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இந்த நிலையில், இப்பாடலில் நடனமாடிய நோரா ஃபதேஹி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரியிருக்கிறார்.
அதில், "இதை ஆதரிப்பதாக யாரும் நினைப்பதை நான் விரும்பவில்லை.. இந்த எதிர்ப்பிற்கு நன்றி. இந்த அழுத்தத்தின் காரணமாக, நல்லவேளையாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதை நீக்கிவிட்டனர். மேலும், அனைவரும் இந்தப் பாடலைப் பகிர்வதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் நீங்கள் தேவையில்லாமல் அதற்கு ஒரு தளத்தை வழங்குகிறீர்கள். சிலர் என் குணநலன்களைத் தாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முயற்சிப்பதை நான் காண்கிறேன்.
இது துரதிர்ஷ்டவசமானது. எப்படியிருந்தாலும், நானும் என் குழுவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் மிகவும் கவனமாக இருப்போம். இருப்பினும், இந்த இந்திப் பாடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதை மீண்டும் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன், நான் அதற்கு நடனமாடவில்லை, மேலும் என் படத்துடன் அதைப் பயன்படுத்த எந்த அனுமதியும் பெறப்படவில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.