ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து டிசம்பர் 5ம் தேதி வெளியான இந்திப் படம் `துரந்தர்' (Dhurandhar). இப்படத்தில் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன், அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன், ராகேஷ் பேடி எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்குள் புகுந்து உளவு பார்க்கும் இந்திய உளவாளி பற்றிய கதை. இப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. ஒரு பக்கம் பிரபலங்களும் ரசிகர்களும் இப்படத்தை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இன்னொரு பக்கம் Ishq Jalakar என்ற இப்படத்தின் பாடல் தனி ட்ரெண்ட் ஆனது. அதனை பயன்படுத்தி பல ஸ்பை ரீல்ஸ் இணையம் முழுக்க வைரல்.
இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 30 நிமிடங்கள், படத்தின் அதீத வன்முறைக்காக A சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் தாண்டியும் படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. முதல் நாள் இந்திய வசூல் 28.60 கோடி என அறிவிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் மொத்தம் 218 கோடி என்ற சாதனையை செய்தது. இரண்டாவது வாரத்தில் இந்த வசூல் 479.50 கோடியாக உயர்ந்தது. படம் வெளியாகி 20 நாட்களை கடந்த நிலையில், அதாவது மூன்று வாரங்களுக்குள்ளாகவே படம் உலகளவில் 1006.7 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு உலக அளவிலும், இந்திய அளவிலும் அதிக வசூல் செய்த இந்திய படமாக மாறியுள்ளது `Dhurandhar'. இரண்டாம் இடத்தில் உலகளவில் 852.34, இந்திய அளவில் 622.46 கோடியுடன், `காந்தாரா சாப்டர் 1' (Kantara: A Legend Chapter-1), மூன்றாம் இடத்தில் உலகளவில் 807.91, இந்திய அளவில் 601.54 கோடியுடன் `சாவா' (Chhaava), நான்காம் இடத்தில் உலகளவில் 570.33, இந்திய அளவில் 329.73 கோடியுடன் `சய்யாரா' (Saiyaara) மற்றும் ஐந்தாம் இடத்தில் உலகளவில் 518, இந்திய அளவில் 285.01 கோடியுடன் ரஜினிகாந்தின் `கூலி' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
A சான்றிதழ் பெற்ற ஒரு படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்ற சாதனையையும் செய்துள்ளது `Dhurandhar'. இப்படம் முடிவடையும் போது அடுத்த பாகத்துக்கான லீட் வைத்தே முடிக்கப்பட்டது. எனவே, Dhurandhar 2 இன்னும் மூன்றே மாதங்களில், 2026 மார்ச் 19ல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.