வெப் சீரிஸில் உலகில் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது `The Ba***ds of Bollywood' என்ற இந்தி சீரிஸ். ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கியுள்ள இந்த சீரிஸ் பற்றி தான் இப்போது பலரும் பேசி வருகிறார்கள். எப்படி என்ன கதை, என்னதான் இருக்கிறது இந்த சீரிஸில்?
பாலிவுட் சினிமா உலகத்தை ஒரு வளர்ந்து வரும் ஹீரோவின் கதை மூலம் சொல்வதே இந்த சீரிஸின் கதைக்களம்.
ஆஸ்மான் சிங் (லக்ஷய் லால்வானி) ரிவால்வர் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமான வளரும் நட்சத்திரம். முதல் படமே பெரிய ஹிட்டாகிவிட அடுத்த வாய்ப்பை கவனமாக தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் இருக்கிறார் ஆஸ்மான். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அஜய் தல்வார் (பாபி தியோல்) மகள் கரீஷ்மா (சஹீர் பம்பா) கரண் ஜோகர் இயக்கத்தில் விரைவில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த ரன்வீர் கைவிரித்துவிட, ஆஸ்மானை, கரீஷ்மாவுடன் நடிக்க வைக்க முடிவாகி, வேலைகள் துவங்குகிறது.
இந்த பட முன் தயாரிப்புகளில் ஆஸ்மான் - கரீஷ்மா நெருக்கம் அதிகமாவதை கவனிக்கும் அஜய், எப்படியாவது இந்தப் படத்தை நடக்கவிடாமல் செய்ய, தன் சூழ்ச்சிகளை துவங்குகிறார். இதன் பின் என்ன ஆகிறது? என்பதை சிறப்பான மேக்கிங், அசத்தலான கேமியோ, பாலிவுட் சினிமாவை பங்கமாய் கலாய்ப்பது என கலாட்டாவான காமெடி காக்டெயிலாக சொல்லி இருக்கிறார்கள்.
பாலிவுட் சினிமா உலகத்தை மையமாக வைத்து ஒரு சீரிஸ், அதனை இயக்குவது ஷாரூக்கின் மகன் ஆர்யன் கான் என்றதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு எந்த குறையும் வைக்காமல் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார். சினிமா உலகத்தை கலாய்ப்பதில் துவங்கி தன்னுடைய கைது வரை எதையும் விட்டு வைக்கவில்லை ஆர்யன். ஏழு எபிசோட்களாக நகரும் இந்த சீரிஸ், எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகர்வது தான் ஸ்பெஷலே.
முதன்மை பாத்திரத்தில் லக்ஷய் லால்வானி படு கூல் இளைஞராக வருவது, காதலை மறைத்துக் கொண்டு நடிப்பது, வாய்ப்புகள் நழுவும் போது பதறுவது எனப் பல இடங்களில் கவர்கிறார். இந்த தொடரின் நாயகன் பர்வீஸ் பாத்திரத்தில் வரும் ராகவ் ஜூயல்தான். தொடர் முழுக்க இவரது ஒன்லைனர்களும், செய்யும் காமெடிகளும் என அதகளம். இதே லக்ஷய் - ராகவ் கூட்டணியை `கில்' படத்தில் பரம விரோதிகளாய் பார்த்த நமக்கு, அப்படியே நேர் எதிர் உணர்வை கொடுத்திருக்கிறார்கள். நிஜமாக இரு நண்பர்களை பார்க்கும் உணர்வு பளிச் என வெளிப்படுகிறது. அஜய் தல்வாராக பாபி தியோல், உணர்வுகளை பெரிதாக வெளிப்படுத்தாத, உர் என முகத்தை வைத்துக் கொண்டு வரும் அதே நடிப்புதான். ஆனாலும் மகளின் விருப்பங்களுக்கு மறுப்பு சொல்வது, பிடிக்காதவர்களுக்கு குடைச்சல் கொடுப்பது என கொடுத்த வேலையை முடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபிரெடி சோடாவாலா ரோலில் மனிஷ் சௌதரி, தந்திரமாக காய் நகர்த்துவது, குறுக்கு வழியில் காரியம் சாதிப்பது என தெளிவான வில்லனாக கவர்கிறார். மேனேஜராக வரும் அன்யா சிங், முன்னாள் நடிகராக ரஜத் பேடி, சித்தப்பா அவதார் சிங் ஆக மனோஜ் பவா, அண்டர் கிரவுண்ட் டானாக அர்ஷத் வர்ஷி என ஒவ்வொரு பாத்திரங்களும் கவனிக்க வைக்கின்றனர்.
கரண் ஜோஹரை மூவி மாஃபியா என அவரே சொல்வது, நட்சத்திரங்களின் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்யும் லான்ச் பேட் என்பதை அவரை வைத்தே கலாய்ப்பது, தாவூத்தை குறிக்கும்படி கஃபூர் கதாப்பாத்திரம், ஷாரூக், சல்மான், ஆமீர் என உச்ச நட்சத்திரங்களின் கேமியோ என்று ரசித்து பார்க்க நிறைய விஷயங்களை உள்ளே சேர்த்த விதம் அசத்தல். எழுத்தாளர்கள் ஆர்யன் கான், பிலால் சித்திக், மனவ் சவுஹன்க்கு பாராட்டுக்கள்.
ஒரு பாலிவுட் டைரி போல, பிரபலமான பாலிவுட் சர்ச்சைகளையும் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஆர்யன் கான். அறிமுக நடிகர்களின் ரவுண்ட் டேபிள் ஒன்று நடப்பது போன்ற காட்சியில் பிரபல நடிகரின் மகளான ஹீரோயினும், எந்த பின்புலமும் இல்லாமல் நடிகரான ஹீரோவும் கருத்து மோதலில் ஈடுபடுவது போல சீரிஸில் இடம்பெற்றிருக்கும். இது 2020ல் ராஜீவ் மசந்த் நடத்திய ரவுண்ட் டேபிளில் அனன்யா பாண்டே - சித்தார்த் சதுர்வேதி இடையே நடந்த கருத்து மோதலை குறிக்கும்படி இடம்பெற்றிருக்கிறது. அதில் அனன்யா "நடிகரின் மகள் என்பதால் எனக்கு எல்லாம் எளிதில் கிடைக்காது, எங்களுக்கு என்ற சில சவால்களும் இருக்கிறது" என சொல்ல, அதற்கு எதிர்க்கருத்தாக சித்தார்த் "இவர்களின் சவால்கள், எங்களின் கனவு நிஜமாவதிலிருந்து துவங்குகிறது" என்றார். இதனைத் தொடர்ந்து நெப்போட்டிசம் சார்ந்து பல விவாதங்கள் மீண்டும் துவங்கியது.
ஷாரூக்கான் விருது வாங்கிய தருணம், தர்மா புரொடக்ஷன் தயாரித்த படத்திலிருந்து கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டது, Me Too Moment எனப் பல விஷயங்கள் பற்றியும் உள்ளே வைத்த ஆர்யன், ஹைலைட்டாக 2021ல் போதை பொருள் வழக்கில் தான் கைதானதை ஸ்பூஃப் செய்யும்படி வைத்திருந்த காட்சி பயங்கர ப்ளாஸ்ட். அதிலும் சீரிஸில் வரும் அதிகாரி நிஜத்தில் ஆர்யனை கைது செய்தவர் போலவே இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர் ப்ரோ.
சீரிஸில் சின்ன குறை என்ன என்றால் க்ளைமாக்சில் வரக்கூடிய டிவிஸ்ட் அவ்வளவு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். மற்றபடி ஒரு அட்டகாசமான அடல்ட் பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகி இருக்கிறது இந்த `The Ba***ds of Bollywood'. தமிழ் டப்பிங்கில் சீரிஸ் உண்டு. கதையில் உள்ளடக்கத்தில் வசனமாகவும் காட்சிகளாகவும் நிறைய அடல்ட் கன்டென்ட் இருப்பதால், இது ஒன்லி 18+ மட்டுமே பார்க்க வேண்டிய சீரிஸ்.