இந்திய சினிமாவில் கவனிக்கத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். தற்போது இவர் இயக்கிய புதிய படம் `நிஷாஞ்சி' (Nishaanchi) செப்டம்பர் 19ம் தேதி வெளியானது. அரசியல் பிரமுகரான பால் தாக்ரேவின் பேரன் ஆயிஷ்வர்ய் தாக்கரே இப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானாதோடு, படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்திருந்தார். இவருடன் வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பப்லூ - டப்லூ என்ற இரு சகோதரர்களை பற்றிய ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது `நிஷாஞ்சி'. மேலும் படத்தின் முடிவில் அடுத்த பாகத்திற்கான லீட் வைத்து முடிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதும், திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தின் முதல் நாள் வசூல் வெறும் 25 லட்சம் மட்டுமே. கிட்டத்தட்ட 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மொத்தமாக 1.5 கோடி கூட வசூல் செய்யவில்லை, அதுவும் உலக அளவிலான வசூலை சேர்த்தால் கூட.
இந்த சூழலில் நவம்பர் 14ம் தேதி `நிஷாஞ்சி' அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்கில் வெளியான முதல் பாகத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்ற சூழலில், `நிஷாஞ்சி' 2ம் பாகத்தையும் சேர்த்தே ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். எனவே `நிஷாஞ்சி 2' திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றி பத்திரிக்கை ஒன்றில் பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப் "இது என்னுடைய பரிந்துரை, அமேசான் (தயாரிப்பாளர்கள்) மற்றும் நாங்கள் இணைந்து எடுத்த முடிவு. முதல் பாகத்திற்கு ரசிகர்கள் வந்திருந்தால், இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மேலும் படம் முழுமையாக இல்லை என்பதே பலருக்கும் குறையாக இருந்தது. அவர்களுக்கு முழுமையான அனுபவத்தை வழங்க எடுத்த முடிவே இது" எனத் தெரிவித்தார்.