ஏஆர் ரஹ்மான் Twitter
சினிமா

வாய்ப்பு மறுப்பு.. மதம் காரணம்?| ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாலிவுட் எதிர்வினை!

பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்த நிலையில், அதனை பாலிவுட் பிரபலங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Prakash J

பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்த நிலையில்,அதனை பாலிவுட் பிரபலங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

பாலிவுட்டில் தமக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருந்த நிலையில்,அதனை பாலிவுட் பிரபலங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அண்மையில் பிபிசிக்கு பேட்டியளித்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 8 ஆண்டுகளாக தமக்கு பாலிவுட்டில் வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், பாலிவுட்டில் மதரீதியிலான பாகுபாடு இருப்பதாகத் தெரியவில்லை என்றுகூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், உள்நாட்டுப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டார் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கக்கூடும் எனவும் ஜாவேத் அக்தர் கூறியுள்ளார். இதேபோல கூறியுள்ள பிரபல பாடகர் ஷான், பாலிவுட்டில் மதரீதியிலான பாகுபாடு இல்லை எனவும், அவ்வாறு இருப்பதால்தான் 30ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் சூப்பர் ஸ்டார்களாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரஹ்மானின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாடகர் சங்கர் மகாதேவன், இசைத் துறை சாராத கார்ப்பரேட் நபர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதே சில சிக்கல்களுக்கு காரணம் என்று கூறியுள்ளார். ரஹ்மானின் கருத்தை கடுமையாக சாடியுள்ள பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத், ரஹ்மானைப் போன்ற வெறுப்பு நிறைந்த மனிதரை, தான் பார்த்ததில்லை எனவும், தனது ’எமெர்ஜென்ஸி’ படத்தை அவர் மறுத்ததற்கான காரணம், அவரது அரசியல் சார்புதான் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் பலரும் இந்தித் திரையுலகில் மதத்திற்கு இடமில்லை எனவும், திறமையே முக்கியம் என்றும் கூறி, ரஹ்மானின் கருத்தை மறுத்துள்ளனர்.

இப்படி பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், ’கலாசாரத்தை இணைக்க, கொண்டாட மற்றும் மரியாதை செய்ய என் ஒரே வழியாக இசை தான் இருந்திருக்கிறது. இந்தியா தான் என் உந்துசக்தி, ஆசிரியர் மற்றும் என் வீடு. சில நேரங்களில் நம்முடைய நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்படும். ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் மரியாதையை உயர்த்த இசை மூலம் சேவை செய்வதே. நான் யாருக்கும் வலியை ஏற்படுத்த விரும்பியதில்லை, என் நேர்மை உணரப்படும் என்று நம்புகிறேன். நான் இந்தியனாக இருப்பதில் பாக்கியம் பெற்றவனாக உணர்கிறேன்’ என அதில் தெரிவித்துள்ளார்.