A R Rahmans response on current good music
A R RahmanGandhi Talks

"இப்போது நான் நல்ல இசையை கொடுப்பதில்லையா?" - ஏ ஆர் ரஹ்மான் சொன்ன பதில் | A R Rahman

`90களில் நீங்கள் `ரோஜா' செய்தீர்கள் சார், அருமையாக இருந்தது' என அவர்கள் சொல்லும்போது, இப்போது நல்ல இசை கொடுக்கவில்லை என்பது போலாகிறது. இப்போது நான் சிறப்பான வேலையைச் செய்யவில்லை என்பதுபோல அது என் சிந்தனையை பாதிக்கிறது.
Published on

கிஷோர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்விந்த் சுவாமி, அதிதி ராவ் நடித்துள்ள படம் `காந்தி டாக்ஸ்'. மௌனப்படமாக உருவாகியுள்ள இப்படம், ஜனவரி 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழு பேட்டி ஒன்றை அளித்துள்ளது. அதில் ஏ ஆர் ரஹ்மானிடம், இனிமேல் குறைவான படங்களில் மட்டுமே பணியாற்றப் போவதாக சொன்னீர்கள். எதனால் அந்த முடிவு? எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான், "என்னிடம் 90களைச் சார்ந்தவர்கள் முதல் இப்போதைய காலகட்டம் வரை பலரும் வருகிறார்கள். அவர்களின் தலைமுறைக்கு ஏற்ப இசை ரசனை இருக்கிறது. `90களில் நீங்கள் `ரோஜா' செய்தீர்கள் சார், அருமையாக இருந்தது' என அவர்கள் சொல்லும்போது, இப்போது நல்ல இசை கொடுக்கவில்லை என்பது போலாகிறது. இப்போது நான் சிறப்பான வேலையைச் செய்யவில்லை என்பதுபோல அது என் சிந்தனையைப் பாதிக்கிறது. எனவே கடந்த ஆறு வருடங்களாக தொடர்ச்சியாக பல படங்களில் வெறி பிடித்ததுபோல பணியாற்றினேன். எனவே இப்போது வருபவர்கள் `மாமன்னன்', `தக் லைஃப்' என என் சமீபத்திய படங்கள் பற்றி பேசுகிறார்கள். இப்போது நான் பாதுகாப்பாக உணர்கிறேன். அடுத்த தலைமுறை என்னைப் பற்றி அறிந்துகொள்ள புதிதான வேலைகளைச் செய்துவிட்டேன். இதை நான் வேண்டுமென்றேதான் செய்தேன்.  

என்னை நானே புதிதுபடுத்தி, மேம்படுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். எப்போதும் நம்முடைய பழைய வழிமுறைகளை கைவிட்டு புதியவைகளை நோக்கி நகரவேண்டும். அதையே வைத்துக் கொண்டிருந்தால் நாம் பழையதாகி விடுவோம். ரேடியோவிலோ, டிவியிலோ இருந்துவரும் பாடல் முதலில் எனக்கு பிடிக்க வேண்டும். மனித வாழ்வில் உள்ள கொடுமைகளில் இருந்து அவர்களை விடுபட இசை உதவுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படியான பாடல்களைத்தான் நான் கேட்பேன். அந்த மாதிரி பாடல்களைத்தான் நான் உருவாக்கவும் விரும்புகிறேன். எனவே, நான் கற்றவற்றில் சில விஷயங்களை இன்னும் வைத்துக் கொள்கிறேன், சிலவற்றை தூர எறிந்துவிட்டு, அடுத்தது என்ன என நகர்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்File image

புதிய எல்லைகளுக்குள் நுழைகிறேன். ஒருவேளை, அது எனக்கு தோல்வியைக்கூடக் கொடுக்கலாம். அது பரவாயில்லை. ஆனால், ஓர் அணியாக நாம் ஒருபோதும் தோற்பது கிடையாது. ஓர் இயக்குநருக்கு நான் கொடுக்கும் முதல் ட்யூன் பிடிக்கலாம், சிலருக்கு 11வது ட்யூன் பிடிக்கலாம். எனவே ஒரு குழுவாக எது சரியாக இருக்கிறது என்பதை அனைவரும் சோதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்போது நான் குறைவான படங்களிலேயே பணியாற்றுகிறேன். ஏனென்றால், `ராமாயண்' என்ற பெரிய படம் ஒன்றில் இருக்கிறேன். என்னுடைய Secret Mountain என்ற Meta Band பணிகளிலும் ஈடுபடுகிறேன். பின்னர் இம்தியாஸ் அலி, மணிரத்னம் படங்களின் பணிகளும் இருக்கின்றன. இதற்கு மேல் என்ன வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com