விசித்ரா
விசித்ரா முகநூல்
பிக்பாஸ்

‘சூட்டிங்கில் அன்று நடந்த கொடுமை; ஒருவர் கூட எனக்காக குரல் கொடுக்கல’ - விசித்ரா சொன்ன கண்ணீர் கதை!

ஜெனிட்டா ரோஸ்லின்

பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியின் 50 வது எபிசோட்டில் சிறந்த போட்டியாளராக பார்க்கப்படும் விசித்ரா, திரையுலகில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான கசப்பான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

1990 களில் தமிழ்- மலையாளம் திரையுரங்கில் கிட்டதட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தவர்தான் விசித்ரா. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியின் வலிமையான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 ஆவது எபிசோட்டில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் திரையுலகில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான கசப்பான சம்பவத்தை மிகுந்த மனவேதனையோடு, “ ஒருவர் கூட எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை” என்று கண்ணீரோடு கூறினார்.

அந்த நிகழ்வு குறித்து கூறிய அவர், “ கேரளாவில் உள்ள மலம்புழாவில் தெலுங்கு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன். மிகப்பிரபலமான நடிகரின் படம் அது. அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அப்படத்தின் கதாநாயகரை அப்போதுதான் முதலில் பார்க்கிறேன். என் பெயர் கூட அவருக்கு தெரியவில்லை. உடனடியாக என்னை பார்த்த அவர், ’நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீர்களா?.’ என்று கேட்டுவிட்டு, ’என் அறைக்கு வாருங்கள் ‘ என்று கூறினார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிர்ச்சியில் நான் என் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். ஆனால் அடுத்த நாளில் இருந்து நான் பட்ட துன்பங்கள்தான் ஏராளம்.

யாரோ ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு என் அறையின் கதவுகளை தட்டுவார். என்ன செய்வதென்றே எனக்கு தெரியாது. இன்னும் நிறைய பிரச்னை ஏற்பட்டது. நான் இருந்த ஹோட்டலில் பிரச்னையை சொன்னேன். அங்கு பணி புரிந்த ஓட்டலின் மேலாளர்தான் இப்போது நான் திருமணம் செய்து கொண்டவர். ஓட்டலின் மேலாளரான என் கணவரும் அவருடன் பணிபுரிந்தவர்களும்தான் இவர்களிடமிருந்து என்னை காப்பாற்றினர். தினமும் வெவ்வேறு அறைகளில் என்னை மாற்றி மாற்றி தங்கவைத்து உதவி செய்தனர். ஆனாலும் பிரச்னை தொடர்ந்துகொண்டே போனது.

தினமும் அவர்களிடமிருந்து நான் இப்படி தப்பிப்பதை கண்டு, ஒருநாள் சண்டைகாட்சி ஒன்றில் யாரோ ஒருவர் என் உடலில் தகாத இடத்தில் தவறான முறையில் சீண்டினார். அது தவறான தொடுதல்தான் என்பதை நான் உணர்ந்தேன். தொடர்ந்து 2 முறை இப்படி செய்தனர். 3 வது முறை யார் என்று கண்டறிந்தேன். பிறகு அவரது கையைபிடித்து அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் நடந்தது குறித்து தெரிவித்தேன். அப்போது எனது கையை தட்டி விட்டு என் கண்ணத்தில் சட்டென அறைந்தார் அந்த ஸ்டண்ட் மாஸ்டர். அருகில் இருந்த ஒருத்தர் கூட எனக்காக குரல் கொடுக்கவில்லை.

எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கண்கள் கலங்கி, மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டேன். இது குறித்து நடிகர் சங்க அப்போதைய தலைவரிடம் கடிதத்தின் மூலம் புகார் அளித்தேன்.

அப்பொழுது எல்லோராலும் மிகுந்த பேசுபொருளாக்கப்பட்ட இந்த பிரச்னையில் ஒருவர் கூட எனக்காக குரல் கொடுக்கவில்லை. அப்போது இருந்த செயலாளர், ‘நீங்கள் எதற்கு சங்கத்திற்கு வந்தீர்கள். அப்பொழுதே காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்க வேண்டும்’ என்று கூறினார்.

அதன் பிறகு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முயன்ற போது அந்த வழக்கில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருந்தன. அந்த சமயத்தில் என் கணவர்தான் என்னுடன் உறுதுணையாக இருந்தார். அதேசமயம் எனது குடும்பத்தை யார் பார்த்து கொள்வது ? என்று கண்ணீரோடு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். அந்த தலைவர் கூட என்னிடத்தில், ’இதையெல்லாம் மறந்துட்டு வேலையை பாருமா’ என்று கூறினார்.

திரையுலகை என் குடும்பம் என்று நினைத்தேன். ஆனால் அதுதான் இல்லை, எனக்காக குரல் கொடுக்க யாரும் வரவில்லை. அப்போது என் கணவர் என்னை பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார்.

என் கணவர் என்னிடம் ’ஒரு இடத்தில் உனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் அங்கு எதற்காக நீ வேலை செய்கிறார். இதற்குதான் நீ வேலை செய்தாயா?‘ என்று கேட்ட கேள்வி என் கண்ணத்தில் பளார் என அறைந்ததை போல இருந்தது. அப்போதுதான் திரைத்துறையை விட்டு வெளியே வர முடிவு செய்தேன்.

இப்போது என் கணவர்தான் எனக்கு மரியாதையான ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னை திருமணம் செய்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இப்போது ஒரு அழகான குடும்பம் எங்களுக்கு உள்ளது. மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். 2001 ஆம் திரையுலகில் இருந்து நான் விலகியதற்கு இதுதான் காரணம்” என்று மனமுடைந்து பேசினார்.

இந்நிலையில் விசித்ரா கூறிய அந்த தெலுங்கு நடிகர், நடிகரும் எம்.எல்.ஏவும் ஆன நந்தமுரி பாலகிருஷ்ணா எனும் பாலையாதான் என்று சமூக வலைதளத்தில் கூறப்பட்டு வருகிறது. 'பாலேவடிவி பாசு' என்ற படத்தில் நடித்தபோது இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் நிகழ்ச்சியில் விசித்திரா இது எதையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை.

விசித்ராவின் இந்த பேச்சு பலரின் மத்தியிலும் அதிர்ச்சியையும் மனதிற்குள் பெரும் கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. ஒரு பெண், தான் விருப்பிய துறையில் தடம் பதிக்க இப்படி எதற்காவது இடம் கொடுத்தால்தான் சாதிக்க முடியுமா ?. சினிமா துறை மட்டும் இல்லை தற்போது இந்த பாதுகாப்பற்ற அருவருக்கத்தக்க சூழல் எல்லா துறையிலும் இருக்கிறது.

அடுப்பங்கறையின் காற்றை சுவாசித்து வந்த நிலை மாறி இப்போதுதான் மாசற்ற இயற்கை காற்றை பெண்கள் சுவாசிக்க துவங்கியிருக்கின்றனர். சிறு தடம் எடுத்து வைப்பதற்குள் எத்தனை தடியடி.. ஆணுக்கு பெண் சமம் என்பதல்ல சமத்துவம்; ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் சமத்துவம். இங்கு யாரும் யாருக்கும் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. எல்லா துறைகளிலும் தற்போது பெண்களும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஊதியத்திற்குரிய வேலையைதான் எல்லோரும் செய்துவருகின்றனர். எனவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, சரிநிகர் மரியாதை என்பது இல்லையென்றால் உரிமை குரல் கொடுப்பதில் தவறொன்றும் இல்லை.. இந்த இடத்தில் பாலின வேறுபாடு அர்த்தமற்றது... இந்த சம்பவத்தின் மூலம் ‘எந்தவித அடக்குமுறையாக இருந்தாலும் உடனடியாகவும், உறுதியாகவும் அதற்கு எதிராக உரிமைகுரல் கொடுப்பது அவசியம்’ என்பது மீண்டுமொரு முறை நமக்கு தெளிவாகிறது.