Akashdeep Saighal AI
சினிமா

'அயன்' பட கமலேஷா இது..? அடையாளமே தெரியாமல் மாறிய நடிகர்! புதிய தோற்றம் VIRAL ஆன பின்னணி என்ன?

அயன் படத்தின் கமலேஷ் வில்லன் அகாஷ்தீப்பின் புதிய தோற்றம் இணையத்தில் வைரல்!

Johnson

தமிழ் சினிமாவின் 'அயன்' படத்தில் கமலேஷ் பாத்திரத்தில் வில்லனாக நடித்த அகாஷ்தீப் சைகல், தனது புதிய தோற்றத்தால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனது முதல் இந்தி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தொடங்கியுள்ள அவர், ரசிகர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான 'அயன்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் அகாஷ்தீப் சைகல் (Akashdeep Saighal). இப்படத்தில் கமலேஷ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், தற்போது தனது வித்தியாசமான தோற்றத்தால் மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.

2009-ம் ஆண்டு வெளியான 'அயன்' திரைப்படத்தை கே.வி. ஆனந்த் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு எதிராக கமலேஷ் என்ற கதாபாத்திரத்தில் அகாஷ்தீப் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து அவர் பேசிய `சாலா நீ யார்ரா?', `இதோட வேல்யூ தெரியுமா?', `லட்டுல வெச்சேன்னு நினைச்சியா தாஸ்' என சில வசனங்களும் மீம் டெம்ப்ளேட்டாக மிக பிரபலமானது. அதன் பிறகு கே வி ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `கவண்' படத்திலும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Akashdeep Saighal

2004ல் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானவர் தொடர்ச்சியாக பல இந்தி தொடர்களில் நடித்து வந்தார். இடையில் சினிமா வாய்ப்பு வரும் போது அவற்றிலும் நடிப்பார். இந்நிலையில், 2017க்கு பிறகு நடிப்பில் இருந்தே இடைவேளை எடுத்திருந்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் மீண்டும் இந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிக்க துவங்கினார்.

அதுவும் அவரது முதல் சீரியலான 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi'ன் இரண்டாம் பாகம். இதில் ஏற்கெனவே நடித்த அன்ஷ் குஜ்ராலின் மகன் ரேயான்ஷ் (Reyansh) கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இதன் மூலம் முன்பு ஸ்மிருதி இரானியின் மகனாக நடித்தவர், தற்போது அதே கதையில் அவரது பேரனாகத் திரும்பியுள்ளார்.

அவரது புதிய தோற்றம் வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, 'அயன்' படத்தில் பார்த்த அகாஷ்தீப்புக்கும் தற்போதைய தோற்றத்திற்கும் இடையே நிறைய மாற்றங்கள் இருப்பதாகப் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் ஒப்பனை மற்றும் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத் தேர்வு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையே, தனது கதாபாத்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அகாஷ்தீப், சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், அவை வெறும் சத்தம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதே ஒரு நடிகரின் வேலை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு காலத்தில் 'அயன்' படத்தின் கமலேஷாக தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அகாஷ்தீப் சைகல், இப்போது தனது புதிய தோற்றம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார். இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் என்ன என்றால் இந்த சீரியல் ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஒளிபரப்பாகி வந்தாலும், அவரது புகைப்படங்கள் தற்போதுதான் இணையத்தில் பேசு பொருள் ஆகி இருக்கிறது.